புளியந்தோப்பு ஆடுதொட்டியில் இருந்து ரூ61.5 லட்சம் கொள்ளை வழக்கில் 2 பேர் சிக்கினர்

பெரம்பூர்: சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் முனீர் பாஷா (44). இவர், புளியந்தோப்பு ஆடுதொட்டியில் மொத்தமாக ஆடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது அலுவலகம் புளியந்தோப்பு பாடிசன்புரம் லைன் பகுதியில் உள்ளது. கடந்த 21ம் தேதி இவரது அலுவலகத்தின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ₹61.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், பெரம்பூர் தில்லை நாயகம்  பிள்ளை தெருவை சேர்ந்த முகமது ஷெரீப் (20) மற்றும் புளியந்தோப்பு ஜெய் நகரை சேர்ந்த சாலமன் (20) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

அவர்களை கைது செய்தனர். விசாரணையில், கைதான 2 நபர்களும் சிறு சிறு திருட்டு வழக்குகளில் ஏற்கனவே தொடர்புடையவர்கள். திடீரென்று பெரிய தொகை கிடைத்துவிட்டதால் தினமும் அந்த பகுதியில் உள்ள  இளைஞர்களுக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர். தற்போது சென்னையில் மதுக்கடைகள்  மூடப்பட்டுள்ளதால், வெளி மாவட்டத்திற்கு  ஆட்களை அனுப்பி மது வாங்கி வந்து, அருந்தியுள்ளனர். மேலும், துணை நடிகைகளை தங்களது பகுதிக்கு வரவழைத்து, உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து ₹40 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

Related Stories: