×

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்...! தூத்துக்குடி ஏ.எஸ்.பி. உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தந்தை, மகன் சித்ரவதை மரண விவகாரத்தில் தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் காவல் உயர் அதிகாரிகள் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் கடந்த 22-ந்தேதி இரவில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் தாக்கியதால் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தந்தை, மகன் இறப்பு குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, காவல்நிலைய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் மற்றும் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், சாத்தான் குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பிற காவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் மகாராஜன் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட மூன்று காவல் அதிகாரிகளும் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையம் முழுக்க முழுக்க் ஏஎஸ்பி, டிஎஸ்பி ஆகியோரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

அப்படி இருக்கும்போது, இருவரும் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை அளிக்கவில்லை. சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் மகாராஜன், நடுவர்மன்ற நீதிபதியை தரக்குறைவாக பேசியுள்ளார். இதன் காரணமாகவே மூவரும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.உன்னால ஒன்னும் செய்ய முடியாதுடா என மாஜிஸ்திரேட்டை ஒருமையில் போலீஸ் பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பேச்சை நீதிமன்றம் மிக கடுமையாக கருதுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நடுவர்மன்ற நீதிபதி கேட்ட ஆவணங்களை தரவும் போலீஸ் மறுத்துள்ளது கடுமையான குற்றம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மூவரையும் பணியிடமாற்றம் செய்தால் மட்டுமே விசாரணை எவ்வித இடையூறுமின்றி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags : Thoothukudi ASP ,branch ,ICT branch ,Tuticorin ASP , Father, Son, Thoothukudi, ASP, Icort Branch
× RELATED சொந்த உபயோகத்திற்காக சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் கைது