×

லாக் டவுனுக்குப் பிறகு...

நன்றி குங்குமம் டாக்டர்

கவுன்சிலிங்

‘தளர்வு அரசாங்கம்தான் கொடுத்திருக்கிறது... கொரோனா அல்ல’ என்ற எச்சரிக்கையை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவு அச்சம் எதுவும் இன்றி பலர் படு இயல்பாக நடமாடி வருகின்றனர். இன்னும் முழுமையாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டால், இந்த அலட்சிய நடவடிக்கை எங்கு சென்று முடியுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இண்டர்னல் மெடிசின் சிறப்பு மருத்துவர் சுதர்சன், ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும் அவசியம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி இங்கே விளக்குகிறார்.

ஏதோ ஊரடங்கு முடிந்ததும், கொரோனா வைரஸ் தொற்று அதோடு போய்விடும் என்று நினைத்து பழையபடி உலகம் சகஜ நிலைக்கு வந்துவிடும் என்ற தப்புக் கணக்கு மட்டும் போட்டுவிடாதீர்கள்.
உண்மையில் இந்த ஊரடங்கு தளர்வு  நிலைக்கு அரசாங்கம் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. காரணம்... பொருளாதார பேரழிவினால் ஏற்படப்போகும் உயிரிழப்பு நோயினால் உண்டாகக்கூடிய மரணங்களைக்காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதே. இது பொருளாதார சுமையைக் குறைப்பதற்கான விடுவிப்பு மட்டுமே!

கொரோனா வைரஸ் நோய்க்கான மருந்துகளோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கும்வரை இந்த வைரஸ் நம்மைச்சுற்றி எங்கும், எதிலும், எப்போதும்( குறைந்தபட்சம் 1 வருடம்) இருந்து கொண்டுதான் இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வெளியில் செல்லும்போது அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். உதாரணத்திற்கு நாம் மட்டும் அணிந்து கொண்டு, எதிரில் இருக்கும் ஒருவர் முகக்கவசம் அணியாவிட்டால் அவர் பேசும்போதும், தும்மும்போதும், இருமும்போது தெளிக்கும் எச்சில் மூலம் நமக்கு தொற்று பரவுவதற்கான வாய்ப்பு 75 சதவீதம் இருக்கிறது. இருவரும் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே தொற்று வாய்ப்பு குறையும்.

சர்ஜிக்கல் மாஸ்க் அணியும்போது அதை 6 மணிநேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அனைவரும் இதை உபயோகிக்க ஆரம்பித்தால் பற்றாக்குறை ஏற்பட்டு, அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நோயாளியோடு நேரடித்தொடர்பில் உள்ள மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் கிடைக்காமல் போக நேரிடும். அதனால் துணி மாஸ்க்கை வீட்டிலேயே எளிதில் தயாரித்துக் கொள்ளலாம். ஃபில்டர் மாஸ்க், டிரான்ஸ்பரண்ட் மாஸ்க் போன்றவை பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.

வெளியில் செல்லும்போது முகக்கவசத்தை அணிந்தால், வீட்டிற்கு வந்த பின்னர்தான் கழற்ற வேண்டும். இடையில் கழற்றுவது, கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வது, அடிக்கடி அதைத் தொடுவது போன்றவற்றை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள். அது ஆபரணமல்ல. உங்களை மற்றவரிடமிருந்தும், மற்றவரை உங்களிடமிருந்தும் பாதுகாக்கும் கவசம்.

ஒவ்வொரு அலுவலகத்திலும் தெர்மல் ஸ்கிரீனிங் முறை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அலுவலகத்திற்கு வரும் அனைவருக்கும் வெப்பநிலையை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும்.

பணியாளர்கள் பயன்படுத்தும் மேஜை, நாற்காலி, கணினியின் மானிட்டர், மவுஸ், டெலிபோன், சேர் எல்லா இடங்களிலும் ஆல்கஹால் உள்ள கிருமிநாசினி கொண்டு தினமும் சுத்தப்படுத்த வேண்டும். சாப்பாட்டு அறையில், மேஜை, நாற்காலிகளை தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.

கழிவறைகளிலும், வாஷ்பேசினுக்கு அருகிலும் ஹேண்ட் சானிட்டைசர்களை வைக்க வேண்டும். கழிவறைகளை 2 மணிநேரத்துக்கு ஒருமுறை கிருமிநாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.லிஃப்டில் கூட்டம் இருந்தால் முடிந்தவர்கள் படிக்கட்டில் ஏற, இறங்க பழகிக்கொள்ளுங்கள். வண்டி சாவியால் லிஃப்ட் பட்டனை இயக்கவும்.

கதவுகளின் பிடிகளை உபயோகிக்கும்போது, வலதுகை பழக்கம் உள்ளவர்கள் இடது கையையும், இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் வலது கையையும் பயன்படுத்துங்கள். இது முகத்தைத் தொடுவதால் கிருமி மூக்கிலும், வாயிலும் செல்லாமல் தடுக்க உதவும்.

உலோக பரப்புகளில் வைரஸ் கிருமிகள் தங்க நேரிடும் என்பதால், வெளியில் செல்லும்போது ஆண்கள் வாட்ச், மோதிரம், பெல்ட், பிரேஸ்லெட் போன்றவற்றை தவிர்க்கவும். பெண்கள் கைநிறைய வளையல்கள், தேவையற்ற ஆபரணங்கள் அணிய வேண்டாம். கல்லூரி மாணவர்களுக்கும் இது பொருந்தும். தேவையில்லாத எந்தவொரு கூடுதல் அலங்காரப் பொருட்களும் வேண்டாம்.

காய்கறிக்கடை, மளிகைக்கடை, சூப்பர் மார்க்கெட் எங்கும் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்க முயற்சிக்க வேண்டாம். கூட்டம் இருந்தால் திரும்ப வந்துவிடுங்கள். பின்னர் வாங்கிக் கொள்ளலாம். உங்கள் உயிரைவிட அந்த பொருள் முக்கியமில்லை. பலரும் கூடும் பர்த்டே பார்ட்டி, வீட்டு விசேஷங்கள், சினிமா, மால் போன்றவற்றிற்கு செல்வதை இன்னும் ஒரு வருடத்திற்கு தள்ளிப்போடுங்கள்.

அவசியமற்ற பயணங்கள் அறவே வேண்டாம். முடிந்தவரை ஹோட்டல் சாப்பாடு வேண்டாம். கட்டாயத்தில் இருப்பவர்கள் கூட்டமில்லாத தனி மேஜையில் உணவருந்தலாம் அல்லது பார்சல் வாங்கிவந்து சாப்பிடலாம்.

வெளியில் செல்லும்போது உலர் கிருமிநாசினியை பாக்கெட், பேக்குகளில் கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள்.ஷேர் ஆட்டோ, மாநகர பஸ் போன்றவற்றில் பயணிக்கும்போது மிக கவனமாக இருங்கள்.

பொது இடங்களில் தும்மும்போது, இருமும்போது கைக்குட்டையை பயன்படுத்துங்கள். தயவு செய்து எச்சில் துப்பாதீர்கள்.
அருகிலுள்ள மளிகைக்கடை, காய்கறிக் கடைகளிலேயே பொருட்களை வாங்கலாம். தொலைதூரம் சென்று வாங்க வேண்டாம்.
ஒரு நாளில் பல நபர்களை சந்திக்க வேண்டிய வேலையில் இருப்பவர்கள் காலை, மாலை இரண்டு வேளையும் வேப்ப இலை, துளசி இலை போட்ட நீரினால் ஆவி பிடிக்க வேண்டும்.

புதிதாக சமைத்த உணவினை சூடாக சாப்பிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்று சாப்பிட வேண்டாம். ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு இவை கூடவே கூடாது.உணவில் வைட்டமின் சி, டி, துத்தநாகச் சத்து(Zinc) மிகுந்துள்ள காய்கறி, பழங்கள், நட்ஸ்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெளிநாடுகளில் கோவிட் 19 வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு ரத்த உறைவுத்தன்மை இருப்பதாகச் சொல்கிறார்கள். இதைத் தவிர்க்க ரத்த உறைவைத் தடுக்கக்கூடிய இஞ்சி, நெல்லிக்காய், எலுமிச்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.எங்கு சென்றுவிட்டு வந்தாலும், கை,கால்களை கழுவிய பின்னர்தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற பழக்கத்தை கட்டாயம் வீட்டில் உள்ள அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் குளித்துவிடுங்கள். உடைகளை வெந்நீரில் ஊறவைத்து துவைக்க வேண்டும்.  வெளியில் எடுத்துச் சென்ற பொருட்களை, முக்கியமாக கிருமிகள் நிறைய சேரும் உங்கள் செல்போனை தினமும் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியால் சுத்தம் செய்துவிடுங்கள்.

தொகுப்பு: உஷா நாராயணன்

Tags : Lockdown , After Lockdown ...
× RELATED லாக் டவுன், 8 மணிக்கு மோடி உரை, தோனி...