அப்படியே சாப்பிடலாம்!

நன்றி குங்குமம் தோழி

கடந்த இரண்டு மாதமாக வெளியே எங்கு சென்றாலும் முகத்தில் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காரணம் கொரோனா தொற்று நோய் ஏற்பட காரணமாக இருக்கும் அந்த வைரஸ் கிருமி வாய் மற்றும் மூக்கு வழியேதான் நம் உடலுக்குள் நுழைந்து, நுரையீரலை தாக்குகிறது. எனவே கண், வாய், மூக்கை தொடாதீர்கள் என எச்சரிக்கை விடுத்தபடி ஊடகங்கள் மற்றும் மருத்துவர்கள் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள்.

இது எப்படி சாத்தியம்? அப்படீனா எப்பவும் மாஸ்க் - முகக்கவசம் அணிந்தபடி இருக்கவேண்டியதுதான். மற்ற நேரங்கள் சரி அணிந்துகொண்டு வேலைப் பார்க்கலாம். ஆனால் சாப்பிடும்போது எப்படியும் கழற்றி தானே ஆக வேண்டும்? அப்போது இந்த வைரஸ் பரவாதா என்ற கேள்விக்கு விடையளித்துள்ளனர் இஸ்ரேல் விஞ்ஞானிகள்.

இனி சாப்பிடும் போதும் மாஸ்க்கினை கழட்ட வேண்டாம். அப்படியே சாப்பிடலாம். அதற்காக புது வகை மாஸ்க்கினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, எப்போதும் போல் முகக்கவசம் மூடப்பட்ட நிலையில் தான் இருக்கும். சாப்பிட ஸ்பூனையோ அல்லது முள்கரண்டியை வாய்க்கு அருகே கொண்டு சென்றால் மூடப்பட்டு இருக்கும் மாஸ்க்கின் வாய்ப்பகுதி, தானாகவே திறந்து கொள்ளும். அப்படி ஒரு தொழில்நுட்பத்தை இதில் இணைத்துள்ளனர்.

மாஸ்க்கில் ஒரு சின்ன வயர் இணைக்கப்பட்டு, அது ரிமோட் மூலம் செயல்படும் படி அமைக்கப்பட்டுள்ளது. அது விரைந்து செயல்பட்டு மாஸ்க்கை திறக்க செய்கிறது. இதனால் மாஸ்கை கழற்றி வைத்து விட்டு சாப்பிடவேண்டிய அவசியம் இல்லை. குளிர்பானம் முதல் ரொட்டி வரையிலான எந்த உணவு பொருட்களையும்  சாப்பிட முடியும்.

ஐஸ்கிரீமை மட்டும் சாப்பிடமுடியாது. ரூ.214க்கு இந்த மாஸ்க் மார்க்கெட்டில் கிடைக்கிறது. எனவே இனி ஓட்டல்களில் இந்த மாஸ்க்கை அணிந்தபடியே சாப்பிடலாம். அருகில் இருப்பவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். அவர் அருகே எப்படி மாஸ்க்கை கழற்றி வைத்து விட்டு சாப்பிடுவது என்ற அச்சம் இனி தேவையில்லை. மேலும் கொரோனா வைரஸ் வாய், மூக்கு வழியே நுழையாது என்பதற்கும் இந்த மாஸ்க் உத்தரவாதம் அளிக்கிறது.

கோமதி பாஸ்கரன்

Related Stories: