ஊரடங்கில் தவிக்கும் பழங்குடிகளும்...நாடோடிகளும்!

நன்றி குங்குமம் தோழி

“144 தடையால் பழனி அருகே டீ குடித்தே உயிர் வாழும் மலைவாழ் மக்கள்”

- செய்தி

ஊரடங்கால் கடுமையான வாழ்வாதார நெருக்கடிகளுக்கு ஆளாகி இருப்பவர்களில் பழங்குடியினரும், நாடோடிகளும் முக்கியமானவர்கள். கொளுத்தும் வெயிலில் நண்பர்கள் சிலர் பங்களிப்புடன்  சில பகுதிகளுக்கு சென்று அவர்களது இருப்பிடத்திலே முடிந்த உதவிகளை செய்துவிட்டு வந்திருக்கிறார் சமூக சிந்தனை யாளரும், மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றவருமான ஹேமமாலினி.

நாடோடிகளில்  பூம் பூம்  மாட்டுக் காரர்கள், சாட்டையடிக்காரர்கள், நரிக்குறவர்கள், சாணை பிடிப் பவர்கள், கழைக்கூத்தாடிகள், லம்பாடிகள், குடுகுடுப்பைக்காரர்கள், இஸ்லாமிய நாடோடிகளான பக்கீர்கள் அடங்குவர். இவர்கள் அனைவருமே கால் நடையாக நடந்து ஊர் ஊராய் சென்று அன்றாட வயிற்றுப்பாட்டை பார்ப்பவர்கள். இதில் கொத்தடிமைகளாய் சென்றவர்களும், பழங்குடி இருளர்களும் உணவின்றி மாட்டிக் கொண்டார்கள். வழக்கமான காலங்களிலேயே விளிம்பு நிலையில் இருக்கும் இவர்களது வாழ்வு பெரும் சவாலான ஒன்று. போக்குவரத்து முற்றிலும் தடைபட்ட நிலையில் சொல்ல வேண்டியதே இல்லை.

மனிதர்களின் தேவைகளும் நெருக்கடிகளும் இங்கு வேறு வேறானவை.  நகரங்களில் வசிக்கும் நம்மாலே சமாளிக்க  முடியாதபோது, அன்றாடம் வயிற்றுப்பாட்டுக்கு வழியற்ற நிலையில், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் நிலை? நிரந்தர வசிப்பிடம் இல்லாததும், இடம் பெயர்தல் என்பதும் பழங்குடி மக்களின் இன்னுமொரு பிரச்சனை. ரேஷன் உள்ளிட்ட அரசின் சிறிய உதவிகளை பெறக் கூட இவர்களில் பலருக்கும் ஆவணங்கள் ஏதும் இல்லை. உணவுக்காக  வேட்டையாட வெளியே செல்ல அனுமதி மறுப் பதாக பலர் வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்கள். இதிலிருந்து மீள்வது எப்படி என தெரியாமல் பலர் வெறுத்துப் போயிருந்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் இனக்குழு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.  எப்போதும் கூட்டம் கூட்டமாகத்தான் இருப்பார்கள். இடம் பெயர்வார்கள்.   அவர்களைத் தனியாக இரு என்றால் கொஞ்சம் கடினம்தான்.  ஊரடங்கில் வருமானத்தை இழந்த பலரும் குழந்தைகள் மற்றும் முதிய வர்களுடன் பட்டினி கிடந்தார்கள். இங்கே  எல்லோருக்குமான பிரச்சனை பசி மற்றும் வேலையின்மை.

‘‘நாங்கள் சென்ற குடியிருப்புகள் பலவற்றிலும் பசியோடு மக்கள் இருந்ததை பார்க்க முடிந்தது.  அதில் பலருக்கும் வீடுகளே இல்லை. அப்படியே வீடு இருந்தாலும் கூரை இருக்காது. பலரின் வீட்டில் புடவைதான் கூரை. இவர்களுக்கு ஆதார் மற்றும் ரேஷன் அட்டைகளும் இல்லை. அவர்களுக்கு பிறந்த தேதியும் தெரியாது. அரசு தரும் நிவாரணங்களை பெற முடியாது பலரும் நிர்கதியாய் இருந்தனர். பழங்குடியினர் நலச் சங்கத்தில் எவ்வாறு தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்கிற விபரம் தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

பெரும்பாலும் இவர்கள் வேட்டை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் உணவை அவர்களே தேடி எடுப்பார்கள். வேட்டை ஆடுவதையும் அரசு தடை செய்ததால், தங்கள் இயல்பை மறந்து காட்டு வேலை, வயல் வேலை, கட்டிட வேலை என தங்களை மாற்றிக் கொண்டார்கள்.  ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது 4 குடும்பம் முதல் அதிகபட்சம் 40 குடும்பங்கள் வரை இருந்தார்கள்.

ஒரு வேளை மட்டுமே கஞ்சி குடித்தவர்கள், அதுவும் இல்லாதவர்கள் என பலரையும் பட்டினியில் பார்க்க முடிந்தது.  இவர்களின் நிலையை உணர்ந்து, நண்பர்கள், உறவினர்கள், முகநூல் நட்புகள்,  தொண்டு நிறுவனங்கள் சிலரின் உதவியோடு அவர்களைத் தேடி, இருப்பிடத்திற்கே சென்று, உணவுப் பொருட்களையும், உணவுப் பொட்டலங்களையும் வழங்கினோம்.

அவர்களுக்கு விழிப்புணர்வை வழங்கும் விதமாக, கொரோனா நோய் தொற்று என்றால் என்ன? அது எவ்வாறு பரவுகிறது. நம் பாதுகாப்பை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும். கை கழுவும் முறை, மாஸ்கை எப்படி பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளி குறித்தும் விளக்கினோம்.

‘‘எங்கயோ ஏரோப்ளேனில் சுத்துறவுங்க எல்லாம் நோயைக் கொண்டாந்து உட்டுட்டாங்க. இப்ப கஞ்சிக்கு வக்கில்லாதவன் எல்லாம் கஷ்டப்படறோம்’’ என்றவர்கள்,  “அரசு சொல்ற  ஊரடங்கை நாங்கள் கடைபிடித்து, எங்கள்  குழந்தை குட்டிங்களை நாங்கள் பட்டினியா போட முடியுமா?’’ என்பதே பெரும்பாலானவர்களின் கேள்வியாக இருந்தது. அரசு அடிக்கடி கை கழுவச் சொல்லுது, ‘‘ஒரு நாளைக்கு 15 தடவை கை கழுவனும்னா தண்ணிக்கு எங்க போறது?’’ இந்த ஊரடங்கால் எங்களுக்கு கிடைத்த ஒரே பலன், ‘பலரும் சாராயம் குடிக்கப் போவதில்லை  என்பது மட்டுமே...’’ இவை நாங்கள் நிவாரண உதவிகளை பகிர்ந்தபோது அவர்களிடம் இருந்து காதில் விழுந்தவை  என்றார்.

‘‘பழங்குடிகள் இயற்கையாகவே ஆரோக்கியத்துடனும் திடகாத்திர மாகவும் இருப்பவர்கள். தற்போது ஏற்பட்டுள்ள பசியும், வேலையின்மையும்தான் அவர் களின் மிகப் பெரும் பிரச்சனை என்றவர், அரசு சில இடங்களில் மட்டும்தான், பால்வாடி மூலம் சத்துணவு அமைப்பாளர்களை வைத்து உணவு சமைத்து தருகிறார்கள். மூன்று வேலைக்கான உணவையும் ஒரே நேரத்தில் தயாரித்து தருவதால் இரவு உணவு கெட்டு விடுகிறது.  ஊரடங்கு இப்படியே நீடிப்பதால் என்ன செய்வதெனத் தெரியாமல் பலர் விக்கித்துப் போயுள்ளனர். இப்போதைக்கு பசியை வெல்வது ஒன்றுதான் இவர்கள் முன்னுள்ள ஒரே சவால்.

ஒரு கிராமத்தில் 30ல் இருந்து 40 வீடுகள் இருந்தால், அதில் அதிகபட்சம் இருபது குழந்தைகள் இருப்பார்கள்.  அவர்களுக்கான உணவு, ஆரோக்கியம், படிப்பைகூட அரசாங்கத்தால் கவனிக்க முடியலைன்னா என்ன அரசு இது?’’ என்ற கேள்வியை முன் வைத்தவர், ‘‘ஊரடங்கு முடிந்தும் இவர்கள் குழந்தைகள் பள்ளிப் படிப்பை தொடர்வது இன்னுமொரு பிரச்சனை. கல்வி இருந்தால் மட்டுமே இவர்கள் வளருவார்கள். இவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளை அரசே ஆரம்பித்து நடத்தினால் மட்டுமே பழங்குடியினருக்கும், நாடோடிகளுக்கும் மாற்றம் கிடைக்கும். அவர்களும் ஒரே இடத்தில் நிலையாகத் தங்குவார்கள்.

என்னதான் தன்னார்வலர்களின் உதவிகள் பரவலாக கிடைத்தாலும் அரசின் கரங்கள் இன்னும் நீள வேண்டும். ஆழமான கிணற்றுக்கு நீளமான கயிறு தேவை. இருப்பவருக்கு ஒன்று... இல்லாதவருக்கு ஒன்று என உலகம் எப்போதும் இங்கே இரண்டாகவே இயங்குகிறது’’ என முடித்தார்.

மகேஸ்வரி நாகராஜன்

Related Stories:

>