சீறிய‌து தோட்டா... கிடைத்தது உலகசாம்பியன்ஷிப்!

நன்றி குங்குமம் தோழி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த  18 வயதான இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில்  ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள்  இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளையாடிய இளவேனில் தொடக்கத்தில் இருந்து நேர்த்தியாக  விளையாடி அதிக புள்ளிகளை பெற்று முன்னிலை வகித்துவந்தார்.

9 சுற்றுகளின் முடிவில் ஒட்டுமொத்தமாக 249.8 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.  மேலும் தகுதிச்சுற்றுக்கான போட்டியில் 631.4 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையும் படைத்தார். இவர் ஏற்கனவே  இரண்டு முறை உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ளார். முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி  தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இது தவிர, குழு பிரிவிலும் மற்ற இந்திய வீராங்கனைகளான ஸ்ரேயா அகர்வால், ஜீனா  கிட்டா ஆகியோருடன் இணைந்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டு குவிந்த வண்ணம்  உள்ளது .

- ஜெ. சதீஷ்