×

‘Menனு முழுங்குறாங்கப்பா நம்மளை... முடியல...’ ‘இதுக்கு கொரோனாவே பெட்டரு... இப்படியா பண்ணுறது டார்ச்சரு...?’

சுய ஊரடங்கு... இப்படி ஒரு வார்த்தையை டீஸராக பிரதமர் மோடி அறிவித்தபோதே, ஒட்டுமொத்த இந்திய மக்களும் மனதளவில் முடங்கினர். அடுத்து ‘மெயின் பிக்சர்’ எத்தனை நாளோ என எண்ணிக்கொண்டிருக்கையில், 21 நாட்கள் தேசிய ஊரடங்கு என அறிவித்தார். அப்புறம் நீ.....ட்டிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. முழு ஊரடங்கு, தளர்வுகளுடன் ஊரடங்கு என டிசைன் டிசைனாக பெயர் வைத்து அறிவித்து வீட்டிற்குள்ளேயே முடங்க வைத்தனர். இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகி உள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் அறிவித்திருந்தது. அதே நேரம், ‘எங்களை போட்டு பெண்கள் டார்ச்சர் பண்றாங்க... இதையும் கொஞ்சம் கவனிங்க சார்...’ என்று முதல்வருக்கே மனு போட்ட, ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் புலம்பலை கேட்கும்போது ஆச்சரியமாக இருந்தது. ‘சிங்கமும் சிக்கியிருச்சுப்பா...’ என்று மீம்ஸ் எல்லாம் போடத்துவங்கி விட்டனர்.

இதுதொடர்பாக ‘இல்லத்தரசர்களான’ கணவன்மார்களிடம் பேசியபோது, தாங்கள் பட்ட துயரங்களை, கல்யாண சமையலுக்கு போட்ட மளிகை பட்டியல் போல நீட்டி முழக்கத் தொடங்கி விட்டனர். அப்படி என்னதான் டார்ச்சராம்...? ஊரடங்கின்போது பெரும்பாலான அரசு, தனியார் அலுவலகங்கள், தொழிற் நிறுவனங்கள், கட்டுமானம், ஓட்டல்கள், கடைகள், தியேட்டர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

இதனால் வேலைக்கு செல்லும் குடும்பத் தலைவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பொதுவாக, இவர்கள் அனைவருமே காலையிலே ‘அரக்கப் பரக்க’ சாப்பிட்டு விட்டு, ஆளுக்கொரு திசையாக பறப்பார்கள். இதனால் வீட்டில் காலையிலேயே மதிய உணவு வரை ரெடியாகும். அதுக்கப்புறம் வீட்டுப்பெண்கள் சீரியல், ஷாப்பிங் செல்வது, அக்கம்பக்கம் வசிப்பவர்களிடம் பேசுவது என ஒரு ஷெட்யூல் போட்டு மாலை வரை பொழுதை ஓட்டுவார்கள். கணவன், குழந்தைகள் வந்ததும், அவர்களுக்கு இரவு உணவு மற்றும் தேவையானதை செய்துக் கொடுத்து உறங்கச் செல்வார்கள்.

ஊரடங்கில் இந்த வழக்கமான நடைமுறையே மாறிப்போனது. வேலைக்கு செல்லாமல் கணவன் மற்றும் பிள்ளைகள் வீட்டில் இருக்கின்றனர். இவர்களுக்கு விருப்பமான உணவை தயார் செய்வது, வெளியில் வாங்கி சாப்பிடுவதால் உடல் பிரச்னை வந்து விடுமோ? உடல் எதிர்ப்பு சக்தி குறைந்து வைரஸ் தொற்று ஆகிவிடுமோ என்ற அச்சத்தில், வீட்டிலேயே பலகாரங்கள், இனிப்புகளை செய்து சாப்பிடத் தொடங்கினர். இதனால் காலை முதல் இரவு வரை வேலைப்பளு இல்லத்தரசிகளுக்கு அதிகரிக்கத் துவங்கியது. ஓய்வு இல்லாத இந்த பணி 3 மாதமாக தொடர்ந்ததால், இதற்குக் காரணமான கொரோனா மீதான கோபம், அப்படியே அவரவர் கணவன்கள் மீது திரும்பியிருக்கிறதாம்.
பாதிக்கப்பட்ட ‘இல்லத்தரசர்கள்’ சிலரிடம் கேட்டபோது...

காலையில் எழுந்து அலுவலகமோ அல்லது வேறு தொழில்களுக்கோ செல்லும்போது, இரவு எவ்வளவு தாமதமாக படுத்தாலும், அதிகபட்சம் காலை 8.30 - 9 மணிக்கு கிளம்பி விடுவோம். பெரும்பாலும் பசங்களுக்கு செய்ற டிபன்தான் கிடைக்கும். ஊரடங்குல... வீட்லதானே இருக்கோம். விதம்விதமாக சாப்பிட செஞ்சுக் கொடும்மான்னு ஆசையா கேட்டோம். கொஞ்ச நாள் பிரச்னை இல்லாம கிடைச்சது... அப்புறம் ஆரம்பிச்சாங்க... பாருங்க...

‘‘இந்தாங்க... சும்மாதானே இருக்கீங்க... இந்த வெங்காயம், பூண்டை உறிச்சுக்கொடுங்க...?’’
‘‘இன்னைக்கு வெள்ளிக்கிழமை.. வீட்டை துடைங்க... அப்படியே, டிரஸ்சை எல்லாம் ஊற வச்சிருக்கேன்.. ஒரு கும்மு கும்மி துவைச்சு காய போடுங்க...’
‘‘பூரிக்கு மாவை பிசைங்க... பிள்ளைங்க குளோப் ஜாமூன் கேட்குது உருட்டிக் கொடுங்க.. பரண்ல ஏறி ஒட்டடை அடிங்க... அதுல இருக்கிற தட்டுமுட்டு சாமானை எல்லாம் கழுவி வைங்க...’’

- இப்படி ஏகப்பட்ட வீட்டு வேலைகளை செய்யச் சொல்லிட்டாங்க... இது மட்டுமா? சண்டே ஒரு டார்ச்சர் வரும் பாருங்க...
‘‘என்னங்க... பையன் ஹீட் சேரலைங்கிறான்.. அவனுக்கு கால் கிலோ மட்டன், சின்னவ சிக்கன்தான் சாப்பிடுவா.. அவளுக்கு உங்களுக்கும் அரை கிலோ சிக்கன், எனக்கு ஒரு அரை கிலோ மீன் வாங்கிட்டு வாங்க...’’ - என்பார்கள்.

மட்டன் வாங்க போனா, மதுரையில இருந்து திருச்சி வரை கியூ நிற்குது.. பாதிப்பேரு மாஸ்க்கே ேபாடாம ‘மாஸா’ நிற்கிறாங்க... கூட்டத்துல அடிச்சு புடிச்சு நிற்கிறாங்க... என்னப்பா... சமூக விலகலே இல்லையான்னு கேட்டா, ‘ஏம்பா.. சாப்பாடே கிடைக்காம அவனவன் கஷ்டப்படுறான்... சமூக விலகலாம்... சமூக விலகல்’ என்று நம்மளை ஏளனமா பார்க்கிறாங்க. அடிச்சுப் பிடிச்சு எல்லாத்தையும் வாங்கிட்டு வீட்டுக்கு போனா, வீட்டுக்காரம்மா, ‘‘உங்களை ேபாய் கடைக்கு அனுப்பினேன் பாருங்க... ஞாயிறு போய் திங்களே வந்திருச்சு... ம்....’’னு சலிச்சுக்கிறாங்க.

இது ஒருபக்கம்னா, மதுப்பிரியர்கள் பாடு ரொம்ப ரொம்பக் கஷ்டம்... மனைவி ஏதாவது சொல்லும்போது, ‘ஏம்மா... இந்த நேரத்துல எதுக்கு இம்புட்டு செலவு’ என்று கேட்டால், ‘‘யோவ்... 100 ரூபா குவார்ட்டரை 500க்கும், ஆயிரத்துக்கும் வாங்கிக் குடிக்கத் தெரியுது... பெருசா பேச வந்திட்டாரு...’’னு அதுக்கும் எத்து வாங்க வேண்டியிருக்கு.
அட.... ஒர்க் ப்ரம் ஹோம்னு வீட்ல இருக்கிறவங்களை விடுங்க... வெளியிலே வேலை பார்த்தவங்க நிலைமை இதை விட பரிதாபம். வேலை முடிச்சு வீட்டுக்குப் போனா, ஏதோ கொரோனா வைரஸ் தான் பேண்ட், ஷர்ட் மாட்டி வீட்டுக்கு வந்த மாதிரி, ஒரு பார்வை பார்ப்பாங்க...

 வாசல்ல வாளி, வரிசையாக 4, 5 கப்பை வச்சிருப்பாங்க... ஒண்ணுல மாஸ்க், அப்புறம் வரிசையாக பேனா, பைக் சாவி, கர்சீப், பர்ஸ் (ஏடிஎம், ஆபிஸ் ஐடி கார்டும் தப்பவில்லை) எல்லாத்தையும் தனித்தனியாக சோப் தண்ணீரில் கழுவி, கடைசியாக மஞ்சள், வேப்பிலை கலந்த வெந்நீரில் குளிக்க வச்சிருவாங்க... ஆபீசுக்கு ேபாய்ட்டு வீடு வந்தா, இயல்பு வாழ்க்கை திரும்பவே ஒரு மணிநேரமாகுதுங்க... ரொம்ப கஷ்டம்...’’

- இப்படி இல்லத்தரசன்களில் புலம்பல்கள் 3 மாதங்களாகவே எல்லோர் வீட்டுலயும் கேட்டுக்கிட்டேதான் இருக்கு... இதுக்கு என்ன காரணம்? வீட்டுப் பொருளாதார நிலை மந்தம், அதிகப்படியான வேலை, சூழல்களால் மன அழுத்தம், பிள்ளைகளின் படிப்பு பாதிப்பு, மனச்சோர்வு போன்றவைகளால், குடும்பப்பெண்கள் பாதிக்கப்பட்டு அதை கணவன்களிடம் காட்டுவதாக மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ... இந்த ஊரடங்கால் குடும்ப நிம்மதியிலும் வைரஸ் புகுந்து,  கெடுத்திருப்பது மட்டும் உண்மை... இந்த நிலை என்று மாறுமோ?

‘சிக்கினத தின்னான் சீனாக்காரன்...சிக்கினவன் சின்னமனூர்காரனா...?

இரு நண்பர்களுக்கிடையிலான சுவாரஸ்ய செல்போன் உரையாடல்:
‘ஹலோ மாப்பிள்ளை... என்னய்யா என்ன பண்ணுறே? சாமானை எல்லாம் கோபத்துல உடைக்கிற மாதிரி இருக்கு...’
‘யோவ்... பாத்திரம் கழுவ சொல்லிட்டாயா...’
‘பாத்திரம் கழுவுறியா... தங்கச்சிக்கிட்டே போனை கொடு’
‘யோவ் சோறு போட மாட்டாயா? அதுக்கூட பரவாயில்லை.. கழுவிட்டு ‘சிங்க்’கையும் சுத்தமாக கழுவச் சொல்றாயா... ஆமா.. அங்க என்ன கடகடன்னு சத்தம்...’
‘சிங்கத்தை சிங்க் கழுவச் சொல்றாங்களா? அது ஒண்ணுமில்லை... மாவு ஆட்டுறேன் மாப்பிள்ளை...’
‘அங்கேயும் இப்படித்தானா...’
‘எங்கேயும் அப்படித்தான்...’.
‘சிக்கினதை எல்லாம் தின்னான் சீனக்காரன்... சிக்கினவன் சின்னமனூர்காரனா... ரொம்ப கஷ்டம்பா...’
- இப்படியாக முடிகிறது.

வீட்டு நிர்வாக குளறுபடியே  விரக்திக்கு முக்கிய காரணம்
பிரபல மனநல டாக்டர் பெரியார் லெனின் கூறியதாவது: ஊரடங்கால் ஆண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்புக்கு முக்கிய காரணமே வேலையிழப்பு. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நச்சரிப்பு போன்றவைதான். அனைவரும் வீட்டில் இருப்பதால் பெண்களுக்கான வேலைப்பளு கூடுகிறது. வழக்கமான தங்களது செயல்பாடுகள் மாற்றமடையும்போது மன உளைச்சல் அடைகின்றனர். வருமானம் இல்லாத சூழலில் வீட்டு நிர்வாகத்தை கையாள்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இது மிக முக்கிய காரணம். நீரோட்டம் ேபால செல்ல வேண்டிய வாழ்க்கை, திடீரென தேங்கி நிற்கும்போது தடுமாறுகின்றனர். இந்த தடுமாற்றமே ஒட்டுமொத்த கோபமாக வெளிப்படுகிறது. அதை கணவன் மீது காட்டுகின்றனர். கூடுதல் நேரம் கிடைக்கிறதே? மனம் விட்டு பேசுவோமே என முயற்சித்தாலும், ஏதாவது பழைய குடும்ப பிரச்னை தலைதூக்கும்போது தம்பதிக்குள் மோதல் ஏற்படுகிறது. அதேநேரம் ஒட்டுமொத்த குடும்பமே உட்கார்ந்து பேசுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்று எண்ணுபவர்களும் இருக்கின்றனர்.

Tags : Covering up many issues. so many tortures
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...