சீனா எதற்காக பயப்படுகிறது? : மே 5 முதல் ஜூன் 15 வரை…

இந்தியாவும் சீனாவும் 3,488 கிமீ எல்லையை பகிர்ந்துள்ளன. இதில் பல பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாடு கோடு வரையறுக்கப்படாததால் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. அதோடு, அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்துக்கு சொந்தமானவை என சீனா பல ஆண்டாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தநிலையில், கடந்த 3 ஆண்டாக எல்லையில் அமைதி நிலவிய நிலையில் சீனாவுக்கு திடீர் ஆத்திரம் ஏற்பட காரணம், எல்லையில் இந்தியா மேற்கொள்ளும் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்தான். 2023ம் ஆண்டுக்குள் 66 சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.

சீனா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளை ஒட்டிய எல்லைக்கு விரைவில் ஆயுத தளவாடங்களை கொண்டு செல்ல வசதியாக இந்தியா சாலை, பாலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாகத்தான் கடந்த மாதம், சீனாவின் எல்லையையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில், கடல்மட்டத்தில் இருந்து 17,000 அடி உயரத்தில் இருக்கும் லிபுலேக்கை இணைக்கும் வகையில் சுமார் 80 கி.மீ. தொலைவிற்கு புதிய சாலை திறக்கப்பட்டது.

இந்த சாலையை அமைத்ததால் ஆத்திரமடைந்த சீனா, நேபாளத்தை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அதேபோல, கிழக்கு லடாக் பகுதியில் 255 கி.மீ  நீளமுள்ள தவுலத் பேக் ஓல்டி நெடுஞ்சாலையை இந்தியா சீரமைத்ததன் விளைவு தான், சீனாவின் ஊடுருவலுக்கு முக்கிய காரணமே. 13,000 அடி உயரத்தில் தொடங்கும் இந்த சாலை 16,000 அடி உயரம் வரை பயணிக்கிறது. இந்தியா- சீனா எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு நேர் இணையாக செல்லும் இந்த சாலை, கரகோரம் மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கும் தவுலத் பேக் ஓல்டி விமானத் தளத்தை, லடாக் ஒன்றியப் பகுதியோடு  இணைப்பதால் ராணுவ மட்டத்தில் இந்த சாலை முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கரகோரம் மலை தொடர் லடாக் மற்றும் சீனாவின் சின்ஜியாங் உய்கர் தன்னாட்சி பிரதேசத்தை பிரிக்கிறது. இந்த சாலைகள் இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்பதால் சீனா பயப்படுகிறது. அதனால்தான் ஒருபக்கம் நேபாளத்தை தூண்டிவிட்டும், மறுபுறம் பாகிஸ்தானை சீண்டி விட்டும், லடாக்கில் ஊடுருவி இந்திய வீரர்களை தாக்கி நெருக்கடி கொடுத்து வருகிறது.

15ம் தேதி இரவு நடந்தது என்ன?

கடந்த 15ம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சீன ராணுவத்தினர் கண்காணிப்பு முகாம் அமைத்துள்ளனர். அதனை, சந்தோஷ் பாபு தலைமையிலான இந்திய படை தட்டிக் கேட்டுள்ளது. உடனடியாக முகாமை காலி செய்துவிட்டு பின்செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. இதற்கு சீன படையினர் கடும் ஆட்சேபம் தெரிவித்து அங்கிருந்து சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே கூடுதல் படையினர் பாதுகாப்பு கவசங்களை அணிந்தபடி அங்கு மீண்டும் வந்து கைகலப்பில் ஈடுபட்டனர். அவர்கள் கற்கள், இரும்பு ராடு, முள்கம்பி சுற்றிய கட்டைகள் போன்றவற்றை கொண்டு இந்திய வீரர்களை தாக்கினர்.

தகவலறிந்து கூடுதல் படையினர் அங்கு விரைந்து, சீன ராணுவத்தினருக்கு பதிலடி தரப்பட்டது. இரவு தொடங்கிய சண்டை அடுத்த நாள் அதிகாலை வரை நீண்டுள்ளது. மைனஸ் டிகிரி வெப்பநிலையில் கடும் குளிர் நிலவிய நிலையில், படுகாயமடைந்த வீரர்கள், சண்டை நடந்த இடத்தின் அருகில் இருந்த கல்வான் ஏரிக்கரையில் ஆங்காங்கே மயங்கி விழுந்துள்ளனர். சில இந்திய வீரர்களை சீன ராணுவத்தினர் பிடித்துச் சென்ற நிலையில், பின்னர் விடுவித்துள்ளனர். இந்த கைகலப்பில்தான் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

போர் ஒத்திகை வீடியோ வெளியிட்டு மிரட்டல்

இந்தியாவுடன் மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், எல்லையில் சீன ராணுவம் சமீபத்தில் செய்த போர் ஒத்திகையை தற்போது வெளியிட்டு மிரட்டியிருக்கிறது. சீன அரசின் பத்திரிகையான குளோபஸ் டைம்ஸ் தனது டிவிட்டரில் வெளியிட்ட அந்த வீடியோவில், சீனா ஆளுகைக்குட்பட்ட திபெத்தின் தெற்கு பகுதியில் உள்ள டாங்குலா என்ற இடத்தில் இந்த போர் பயிற்சி நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் உட்பட அதிநவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தரையிலிருந்து வானில் பாயும் ஏவுகணைகள், நீண்ட தூரத்திற்கு எறியும் பீரங்கி குண்டுகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

முப்படைகள் அலர்ட்

லடாக் பிரச்னையை தொடர்ந்து முப்படைகளுக்கும் உச்சகட்ட அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் சீன கடற்படை அத்துமீறும் நிலையில், கடற்படை வீரர்கள் முழு எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது. இந்திய ராணுவமும், விமானப்படையும் தயார் நிலையில் உள்ளன.

இருதரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்க் யீ உடன் தொலைபேசியில் நேற்று பேசியபோது, கல்வான் மோதல் இருதரப்பு உறவி்ல் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், சீனா தனது நடவடிக்கைகளை சரிப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், சீன தரப்பு திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தியதாகசில விளக்கங்களும் தரப்பட்டுள்ளது.

வீரமரணமடைந்த வீரர்கள்

கல்வான் மோதலில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களின் பெயரை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

மே 5-6: லடாக்கின் பாங்காங்க் திசோ ஏரிப் பகுதியில் ரோந்து பணியின் போது இந்திய, சீன ராணுவ வீரர்கள் மத்தியில் கைகலப்பு ஏற்பட்டது. சுமார் 250 வீரர்கள் மோதிக் கொண்ட இந்த கைகலப்பில் சீன படையினர் கற்கள், இரும்பு ராடுகள், இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்ட கட்டைகளை கொண்டு பயங்கரமாக தாக்கினர்.

மே 9: கைகலப்பால், லடாக் கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சிக்கிமின் நகுலா பகுதியில் மீண்டும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. 150 வீரர்கள் சண்டை போட்டுக் கொண்டதில் இந்திய தரப்பில் 4 வீரர்களும், சீன தரப்பில் 7 பேரும் காயமடைந்தனர்.

மே 10: இவ்விரு கைகலப்பு சம்பவங்களையும், இரு தரப்பினர் காயமடைந்தது குறித்தும் இந்திய ராணுவம் உறுதி செய்தது.

மே 12: கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு வீரர்கள் நேருக்கு நேர் சந்தித்தனர். எல்லைக் கட்டுப்பாடு கோடு வரையறுக்கப்படாத இப்பகுதியில் சீன படையினர் அத்துமீற முயன்றனர்.

மே 19: பாங்காங்க் திசோ, கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸில் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் இந்திய படை அத்துமீறியதாக சீன வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியது. வழக்கமான ரோந்து பணியின்போது சீன படையினர் குறுக்கிடுவதாக இந்தியா குற்றம்சாட்டியது. இந்திய படைகள் எல்லைக்கு உட்பட பகுதியில் மட்டுமே செயல்படுவதாக ராணுவம் விளக்கம் அளித்தது.

மே 22: ராணுவ தளபதி நாரவனே லே பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து இரு தரப்புகளும் எல்லையில் படைகளை  குவிக்கத் தொடங்கின.

மே 25: சீனா தனது எல்லையில் 5,000 வீரர்களை கூடுதலாக நிறுத்தியது. பதிலுக்கு இந்தியாவும் படைகளை அனுப்பியது.

மே 27: பதற்றமான சூழலில் இந்திய, சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்தது.

மே 30: எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவ மற்றும் தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்துவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஜூன் 6: அரிதாக நடக்கக் கூடிய, லெப்டினன்ட் ஜெனரல் கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. இதன் மூலம் லடாக் எல்லையில் பதற்றம் தணியத் தொடங்கியது.

ஜூன் 9: கல்வான் பள்ளத்தாக்கு, பேட்ரோலிங் பாயின்ட் 15, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 3 இடங்களில் சீனா தனது படையை வாபஸ் பெறத் தொடங்கியது.

ஜூன் 10: 4ம் கட்டமாக இரு தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. மேஜர் ஜெனரல் மட்டத்திலான அதிகாரிகள் பேட்ரோலிங் பாயின்ட் 14 பகுதியில் ஆலோசனை நடத்தினர்.

ஜூன் 12: சீனா தனது எல்லையின் பின்தங்கிய பகுதியில் 8,000 வீரர்களை நிலைநிறுத்தியது. மேலும் பீரங்கிகள், பீரங்கி குண்டுகள், ராக்கெட் குண்டுகள், வான்வழி தாக்குதல் தடுப்பு ரேடார்கள் போன்ற ஆயுதங்களை தயார் செய்திருந்தது.

ஜூன் 13: லடாக் எல்லையில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்படும் என்றும் ராணுவ தளபதி நாரவனே நம்பிக்கை தெரிவித்தார்.

ஜூன் 15: ராணுவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்ந்தது. அன்றைய மாலையிலேயே இந்திய, சீன ராணுவத்தினர் இடையே பயங்கர கைகலப்பு வெடித்தது.

சீனா தான் காரணம்

‘‘இந்தியா-சீனா இடையிலான உடன்படிக்கையை சீனா மீறி விட்டது. லடாக் எல்லை நிலைமையை ஒருதலைபட்சமாக சீனா மாற்ற முயன்றதே பிரச்னைக்கு காரணம்.’’  

- மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவே காரணம்

‘‘இரு நாடுகளும் செய்து கொண்ட உடன்படிக்கையை இந்தியா மீறியதாலே மோதல் நடந்தது. இது தொடர்பாக இந்திய அரசு உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமாக, விதிமீறியவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். இனியும் இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் முன்கள படையினரை கட்டுப்படுத்த வேண்டும்’’

-  சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யி.

கல்வான் பள்ளத்தாக்கு மீது சொந்தம் கொண்டாடும் சீனா

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மீது சீனாவுக்கு எப்போதும் இறையாண்மை உண்டு எனக்கூறி சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லிஜியன் புதுப்பிரச்னையை கிளப்பி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘கல்வான் பள்ளத்தாக்கு மீது சீனாவுக்கு எப்போதும் இறையாண்மை உண்டு. தற்போது எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இனியும் எந்த மோதலையும் நாங்கள் விரும்பவில்லை,’’ என்றார். இதே போல சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி, ‘‘தற்போதைய சூழலை வைத்து இந்திய தரப்பு தவறாக மதிப்பிட்டு விடக் கூடாது. எங்கள் பிராந்தியத்தின் இறையாண்மையை பாதுகாக்காமல் நாங்கள் விட்டுவிடுவோம் என தப்பு கணக்கு போட வேண்டாம்,’’ என எச்சரித்துள்ளார்.

சீன தரப்பில் 35 பேர் பலி?

இந்திய தரப்பில் 20 வீரர்கள் பலியானதாக ராணுவம் உறுதி செய்த நிலையில், பலி தொடர்பாக சீனா எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இது குறித்து சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லிஜியனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘இவ்விவகாரத்தை எல்லைப் படை கவனித்து வருகிறது. எனவே இந்த சமயத்தில் என்னால் எதையும் கூற முடியாது’’ என்றார். அந்நாட்டு அமைச்சரும் பலி தொடர்பான எண்ணிக்கையை அறிவிக்கவில்லை. இதற்கிடையே, அமெரிக்காவுக்குக் கிடைத்துள்ள உளவுத் தகவலின்படி, சீனாவில் ஒரு உயர் அதிகாரி உள்பட 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

கைகலப்பில் ஈடுபடுவது ஏன்?

இந்தியாவும், சீனாவும் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதன்படி, இருதரப்பு ராணுவமும் சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் இருந்து 2 கிமீ தொலைவுக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது என்பது விதிமுறையாகும். அதனால்தான், எல்லை தாண்டுதல் சம்பவங்களை தடுக்கும்போது இரு நாட்டு வீரர்களும் கைகலப்பில் ஈடுபடுகின்றனர்.

பொருட்களை புறக்கணிக்க வர்த்தகர்கள் கோரிக்கை

சீனாவின் அத்துமீறிய செயலால் நாடு முழுவதும் மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். சீன தயாரிப்புகள் அனைத்தையும் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டிய 500 சீன தயாரிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பொம்மைகள், ஜவுளி ரகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலைறை பொருட்கள், ஹார்டுவேர்கள், காலணிகள் என பல ரகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

உன்னிப்பாக கவனிக்கிறது அமெரிக்கா    

இந்தியா-சீனா இடையே நிலவி வரும் பிரச்னைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்த அதன் வெளியுறவுத்துறை அறிக்கையில், ‘‘இரு தரப்பினரும் மோதல் போக்கை கைவிட்டு, அமைதியை நிலைநாட்ட வேண்டும். கடந்த 2ம் தேதி அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசும் போது, எல்லை விவகாரம் தொடர்பாகவும் கேட்டறிந்தார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>