டிப்ஸ் ... டிப்ஸ் ..

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

தயிர் மீதம் இருந்தால் ஒரு பாத்திரத்தில் வைத்து தேங்காயை பொடிப்பொடியாக நறுக்கி தயிரில் போட்டால் இரண்டு  நாட்கள் வரை தயிர் புளிப்புத்தன்மை அடையாது.

- எஸ்.சடையப்பன், திண்டுக்கல்.

அதிகமாக நாள்கணக்கில் மாவு இருக்கும் பட்சத்தில் புழு, வண்டு போன்ற பூச்சிகள் வந்து சேர்ந்துவிடும். இதனால் மாவு  உள்ள பாத்திரங்களில் பிரிஞ்சி இலைகளைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்களானாலும் பூச்சி, வண்டு வரவே வராது.

- வா.மீனாவாசன், வந்தவாசி.

சப்பாத்திகளின் மேல் சர்க்கரையும், ஏலப்பொடியும் கலந்த பால் அல்லது தேங்காய்ப்பால் ஊற்றி சில நிமிடங்கள்  வைத்திருந்தால் அதன் ருசியே தனிதான்.மைசூர் பாகு மொறு மொறுவென்று வரவேண்டும் என்றால் மைசூர் பாகு  செய்து முடிக்கும்போது ஒரு சிட்டிகை சோடா உப்பை போட்டால் பொங்கி வரும். அப்போது தட்டில் ஊற்றி துண்டுகள்  போட்டால் பக்குவமாக வரும்.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

பலகாரம் செய்த பாத்திரங்களில் அடிபிடிக்கும். அவற்றின்மீது சிறிது சமையல் சோடாவைத் தூவி, வெந்நீரில் ஊறிய  பின்பு தேய்த்தால் அடிபிடித்த சுவடு தெரியாமல் போய் பாத்திரங்கள் பளிச்சிடும்.

- வா.சியாமளா, வந்தவாசி.

எலுமிச்சை, கிடாரங்காய், நார்த்தங்காய் ஊறுகாய் தோல் கருப்பாக இருந்தால் உப்பில் ஊறிய காய்களை வரமிளகாய்,  வெந்தயம், பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து வதக்கி தொக்குபோல செய்துவிட்டால் தோலின் கசப்புத்தன்மை  குறையும்.

- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

செளசெளவைத் துருவி ஆவியில் வேக வைத்து தயிர் பச்சடி செய்தால் சுவையாக இருக்கும்.காய்கறி சாலட்  செய்யும்போது காய்கறிகளை நறுக்கிக் குளிர்ந்த நீரில் போட்டு எடுத்து பயன்படுத்தினால் க்ரிஸ்பியாக நன்றாக  இருக்கும்.

- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.

உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிது சேமியாவை தூள் செய்து போட்டு கலந்து வடை செய்தால் மொறு  மொறுவென சுவையாக இருக்கும்.

- ஆர்.அஜிதா, கம்பம்.

பயணங்களுக்கு எடுத்துச்செல்ல இட்லி தயாரிக்கும்போது உளுந்தைக் கொஞ்சம் போட்டுக் கெட்டியாக அரைக்கவும்.  இட்லி வார்க்கும்போது ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் விட்டு கலக்கி வார்க்கவும். இம்முறையில் இரண்டு நாட்கள்  வரை இட்லி கெடாது.கத்தரிக்காயை வேக வைக்கும்போது ஒரு டீஸ்பூன் தயிர் சேர்க்க வேண்டும். கத்தரிக்காய் நன்றாக  குழையும், ருசியும் கூடும்.

- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

அப்பளம் நமுத்துப் போகாமல் இருக்க, உளுத்தம் பருப்பு டப்பாவில் அப்பளங்கள் மேலாக வைத்து இறுக மூடி  வைத்துவிட்டால், அப்பளம் நமுத்துப் போகாமல் வெயிலில் உலர்த்தியதுபோல அருமையாக இருக்கும்.

மாவடுவில் கொஞ்சம் விளக்கெண்ணெய் விட்டால், பூச்சிகள் வராமல், கெட்டுப் போகாமல் நீண்ட நாள் இருக்கும்.

- ஆர்.மகாலட்சுமி, சென்னை.

Related Stories: