சலுகை அறிவிப்பால் ஆர்வம் காட்டும் நிறுவனங்கள் குறு, சிறு தொழில் என பதிவு செய்தாலும் கடன் கிடைக்க வாய்ப்பே கிடையாதாம்

சென்னை : மத்திய அரசின் சலுகையில் கடன் வாங்க ஆசைப்பட்டு, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் என புதிதாக பதிவு செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் இவர்களுக்கு கடன் கிடைக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  கொரோனா ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்தான். ஏற்கெனவே போதிய கடன் கிடைக்காமல், புதிய முதலீடுகள் மேற்கொள்ள முடியாமல் திண்டாடி வரும் இந்த தொழில்துறையினர், கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசில் உதவிக்கரம் கிடைக்காதா என்று எங்கும் நேரத்தில், 20 லட்சம் கோடி மதிப்பிலான சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இதில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்கு பிணை இல்லாமல் கடன் வழங்க ₹3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனால் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும் என மத்திய அரசு கூறியது. இதன்படி கணக்கிட்டால் சராசரியாக ஒரு நிறுவனத்துக்கு 6.66‌ லட்சம் மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையிலிருந்து மீள இது உதவாது. இதற்கிடையில், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறையில் மத்திய அரசு மாற்றங்கள் செய்தது. இதைத் தொடர்ந்து, ஏராளமான சிறு குறு நிறுவனங்கள் உத்யோக் ஆதார் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றன. இருப்பினும் இந்த நிறுவனங்கள் எதிர்பார்த்தபடி கடன் கிடைக்காது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மத்திய அரசு திட்டப்படி குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் பிணை இல்லாமல் கடன் பெற அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம். ஆனால், ஏற்கெனவே அந்த நிறுவனங்கள் வாங்கிய கடன் நிலுவை 25 கோடிக்குள் இருக்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் புதிய கடன்கள், 100 கோடி வரை ஆண்டு வர்த்தகம் உள்ள நிறுவனங்களுக்கு, ,’கூடுதல் செயல் மூலதன நிதி’யாக மட்டுமே வழங்கப்படும்.

 அதுவும், இந்த நிறுவனம் கடந்த பிப்ரவரி இறுதியில் வைத்திருந்த கடன் நிலுவையில் அதிகபட்சம் 20 சதவீதம் அளவுக்கு மட்டுமே கடன் கிடைக்கும். எந்தவிதமான பிணையும் இல்லாமல் 100 சதவீத அரசு உத்தரவாதத்துடன் கடன் கிடைக்கும் என்பதால் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு

உத்யோக் ஆதார் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றன. ஏற்கெனவே சிறு குறு நிறுவனங்கள் பதிவு செய்து கடன் நிலுவை வைத்திருப்பவர்களுக்கு தான் இந்த திட்டம் பொருந்தும் என்பதால், தற்போது இணையதளத்தில் பதிவு செய்வோருக்கு எந்த பலனும்

கிடைக்கப் போவதில்லை என அதிகாரிகள் கூறினர்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா

நிதி நெருக்கடி நிலையில் உள்ள சிறு குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க 20,000 கோடி ஒதுக்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், மத்திய அரசு கடன் உறுதி நிதி அறக்கட்டளைக்கு 4,000 கோடி வழங்கும். இதன் மூலம் நெருக்கடி நிலையில் உள்ள நிறுவனங்கள் பிணை அல்லது மூன்றாம் நபர் உத்தரவாதம் இல்லாமல்  கடன் பெற முடியும். ஆனால், தற்போதைய வராக்கடன் விதிகள் இதற்கு ஏற்றதாக இல்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் 2 லட்சம் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. நிதி நெருக்கடியில் உள்ள நிறுவனங்களின் பங்குகளில் 15 சதவீத பங்குகளின் சந்தை மதிப்புக்கு ஏற்ப கடன் கிடைக்கும்.  அதிகபட்சம் 75 லட்சம் வரை வாங்கலாம். தற்போது பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருவதால், சந்தை மதிப்பு குறைவாகத்தான் இருக்கும்.இந்தக் கடன் திட்டமும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட, கடனை செலுத்த முடியாமல் நிதி நெருக்கடியில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் புதிதாக பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு பலன் கிடைக்காது. ஏற்கெனவே பதிவு செய்த நிறுவனங்களுக்கும் கடன் வழங்க ஏதுவாக விதிமுறைகள் வந்தால் மட்டுமே வங்கிகளும் கடன் வழங்க முடியும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கடந்த 2018-19 நிதியாண்டு அறிக்கையின்படி, மொத்தம்,

6.33 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 6.30 கோடி நிறுவனங்கள், குறு

நிறுவனங்கள்தான். கடந்த 5 ஆண்டுகளில் 90.19 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

* மத்திய அரசு சலுகை திட்டம் அறிவித்த பிறகு, உத்யோக்

ஆதாரில் பதிவு செய்யும் நிறுவனங்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர தொடங்கியது. கடந்த மாத இறுதியில் மட்டும், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 15.26 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டன. அதற்கு அடுத்த இடங்களாக, தமிழகத்தில் 9.46

லட்சம், பீகாரில் 8.73 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்தன.

* உத்யோக் ஆதாரில் நிறுவனங்கள் பதிவு செய்வது

நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்த இணையதளத்தில் பதிவு செய்த மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை 1,37,46,797ஐ எட்டியுள்ளது.

Related Stories:

>