×

கொரோனா தடுப்பூசி 0n the Way..!

நன்றி குங்குமம்

இன்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு விஷயம் இருக்கும் என்றால் அது கொரோனாவுக்கான தடுப்பூசிதான். கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் ஐம்பது லட்சம் பேர் வரை இதுவரை இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளோடு இந்தியாவும் இணைந்து இந்த கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் சவாலில் இறங்கியுள்ளது. உலகம் முழுதும் உள்ள 110 நிறுவனங்கள் கடந்த நான்கு மாத காலமாக இதற்காகப் போராடி வருகின்றன. சீனா தயாரித்துள்ள இந்த ‘சினோவேக்’ (Sinovac) என்னும் தடுப்பூசி, போலியோ தடுப்பூசி போன்றது. கொரோனா கிருமி களைச் சுத்தப்படுத்தி, ஃபார்மால்டிஹைடு திரவத்தில் கலந்து, அந்தக் கிருமிகளைச் சாகடித்து தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இது சோதனைக்கட்டத்தில்தான் இன்னமும் உள்ளது. சீனாவின் இராணுவ மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் ஸென் வெய் (55) என்பவர் இதை உருவாக்கியிருக்கிறார்.‘டி.என்.ஏ. மறுஇணைப்பு’ (DNA Recombinant Technology) எனும் நவீன தொழில்நுட்பத்தில் இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்துக்கு கிருமிதான் தேவை என்பதில்லை.

கிருமியின் மேலுறையில் காணப்படும் புரதம் அல்லது அதன் மரபணு வரிசை (Genome) இருந்தாலே போதும். சீனாவில் கொரோனா பரவிய சில வாரங்களிலேயே இந்தக் கிருமியின் மரபணு வரிசையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உலகத்துக்குத் தெரிவித்து விட்டனர். எனவே, சனோஃபி என்னும் பிரெஞ்சு நிறுவனம் இந்த முறைப்படி ஒரு புதிய தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. கொரோனா என்பது ஆர்.என்.ஏ வைரஸ். நம் சுவாசப்பாதை செல்களில் ஏசிஇ2 என்னும் புரதம் இருக்கிறது. இதனுடன் ஆர்.என்.ஏ வைரஸ் இணைந்து உடலுக்குள் புகுந்துவிடுகிறது. இந்த இணைப்பைத் தடுப்பதற்கு ஒரு தடுப்பூசி வேண்டும். அதுதான் சனோஃபி கண்டு பிடித்துள்ள புதிய தடுப்பூசி. கொரோனாவிலிருந்து ஆர்.என்.ஏ-வைப் பிரித்துக்கொள்கிறார்கள். அடுத்து ‘பிளாஸ்மிட்’ என்னும் கடத்துயிரியின் டி.என்.ஏ-வில் சிறு பகுதியைக் கழற்றிவிட்டு, அந்த இடத்தில் ‘ஆர்.என்.ஏ’வை இணைத்துவிடுகிறார்கள். இப்படி கழற்றுவதற்கும் இணைப்பதற்கும் சில என்சைம்கள் உதவுகின்றன. இப்படி மறுஇணைப்பில் புதிய வடிவெடுத்துள்ள ஆர்.என்.ஏ-வைப் பிரித்தெடுத்து இ.கோலி எனும் பாக்டீரியாவுக்குள் செலுத்துகிறார்கள். அந்த பாக்டீரியா தன்னுடைய வளர்ச்சியின்போது ‘ஆர்.என்.ஏ’வை கோடிக்கணக்கில் நகல் எடுத்துக் கொடுக்கிறது.

பின்பு அவற்றைப் பிரித்தெடுத்து தடுப்பூசி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் ‘டி.என்.ஏ. மறுஇணைப்’பின் செயல்முறை. இந்த வழியில் கொரோனா தடுப்பூசிக்குத் தேவையான ‘ஆர்.என்.ஏ’ புரதங்களை எளிதாகவும் வேகமாகவும் மிக அதிக அளவிலும் தயாரிக்க முடிவது இந்தத் தொழில்நுட்பத்தால் கிடைக்கும் பெரும் பலன்.இந்தியாவில் பூனாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் அமெரிக்காவின் கோடாஜெனிக்ஸ் (Codagenix) நிறுவனத்துடன் இணைந்தும், ஜெர்மனியின் க்யூர்வேக் நிறுவனம் தனியாகவும் ஏறக்குறைய இதேபோன்று தலா ஒரு தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. இவற்றைத் தவிர, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு ‘mRNA-1273’ என்று பெயர். அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தலுக்கு முன்பு இந்தத் தடுப்பூசியைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறார்.இந்தப் புதிய தடுப்பூசியில் ‘எம்ஆர்என்ஏ’ பயன்படுத்தப்படுகிறது. இது வைரஸ் சைட்டோபிளாஸத்தில் உள்ள ஆர்.என்.ஏ பிரதி. இது டி.என்.ஏவுக்காக தூது செல்லும் பிரதிநிதி. இதிலும் வைரஸின் அதே மரபணு வரிசைதான் இருக்கும். இதைப் பிரித்தெடுத்து அது மாதிரியே செயற்கை முறையில் தயாரித்து, நானோதுகள் கொழுப்புப் பந்துகளுக்குள் செலுத்தி இவற்றைத் தடுப்பூசியாகப் பயன்படுத்துகிறார்கள். இது மிக எளிதான செயல்முறை. அதனால்தான், சீனா கொரோனாவின் மரபணு வரிசையை அறிவித்த 42ம் நாளில் இதைத் தயாரித்துவிட்டனர்.

63ம் நாளில் அதை சோதிக்கத் தொடங்கி உலக நாடுகளை வியக்கவைத்தனர். ‘mRNA’ நகலானது கொரோனா வைரஸின் மரபணு வரிசையைப் பெற்றிருப்பதால், நமது உடலுக்குள் இதைச் செலுத்தும்போது, நமது தடுப்பாற்றல் மண்டலத்தில் உள்ள எதிரணுக்கள் இதை கொரோனா வைரஸாகக் கருதிக் கொள்கிறது. அடுத்த முறை கொரோனா தாக்கினால், அதை அடையாளம் கண்டு உடல் செல்களுக்குள் நுழைவதைத் தடுத்துவிடுகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் இண்டர்நேஷனல் நிறுவனம் ‘கோரோஃபுளூ’ (CoroFlu) என்ற பெயரில் தடுப்பூசியை உருவாக்கியிருக்கிறது. ஏற்கெனவே ஃபுளூ காய்ச்சலுக்கு ‘ஃபுளூஜென்’ எனும் தடுப்பு மருந்தை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. இந்த மருந்தில் கொரோனா மரபணு வரிசையையும் கூடுதலாகச் செலுத்தி சோதித்துப் பார்த்து பாரத் பயோடெக் இண்டர்நேஷனல் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தடுப்பூசி ஃபுளூ நோயையும் தடுக்கும்; கொரோனாவையும் தடுக்கும்.

இது தசை வழியாகக் குத்தப்படும் ஊசியில்லை; மூக்கு வழியாக உறிஞ்சப்படும் தடுப்பு மருந்து. மேற்கண்ட தடுப்பூசி முயற்சிகளைத் தவிர ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா ஜெனக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் தடுப்பூசி, தாய்லாந்தின் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி, பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ள புகையிலையின் புரதச்சத்துக்களிலிருந்து எடுக்கப்படும் புதிய முறை தடுப்பூசி, ஜெர்மன் மற்றும் அமெரிக்கக் கூட்டுறவில் தயாரிக்கப்படும் பிஎண்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி உட்பட 110 தடுப்பூசி ஆய்வுகள் இரவு பகல் பாராது நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வுலகுக்கு என்று கொரோனா தடுப்பூசி ஒன்று முதன் முதலாக வருகிறதோ அந்நாள் உலக வரலாற்றில் மிக முக்கியமான ஒரு திருவிழாவாக மாறும். அதைக் கண்டுபிடிக்கும் நிறுவனமும், விஞ்ஞானியும் சர்வதேசப் புகழ்பெறுவார்கள் என்பதால், உலகில் உள்ள எல்லா மருத்துவ விஞ்ஞானிகளுமே தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் சரி, இவை எல்லாம் எப்போது சந்தைக்கு வரும்… மக்களுக்குக் கிடைக்கும்..?

பொதுவாக, ஒரு புதிய தடுப்பூசி சந்தைக்கு வர ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் ஆகும். காரணம், அது பல நடைமுறைகளைத் தாண்டி வர வேண்டும். முதலில் அதை விலங்குகளுக்குக் கொடுத்துப் பார்ப்பார்கள். ஆபத்தான விளைவுகள் இல்லை என்று தெரிந்த பிறகு, குறிப்பிட்ட வயதுள்ளவர்களில் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்குக் கொடுப்பார்கள். இதற்கு கொரோனா அதிகம் பரவும் பகுதிகளில் வசிக்கும் தன்னார்வலர்கள் தேவைப்படுவார்கள். ஓராண்டு காலத்துக்கு அவர்கள் உடலில் ஏதாவது பக்க விளைவு ஏற்படுகிறதா என்று தொடர்ந்து பரிசோதிக்கப்படும். பக்க விளைவு இல்லை என்றால் மட்டுமே, அதை வணிக ரீதியில் தயாரிக்க அரசின் அனுமதியைப் பெற முடியும். மருந்தை மொத்தமாகத் தயாரிக்கும்போது அதன் பாதுகாப்புத்தன்மையையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் நிரூபித்தாக வேண்டும். இவ்வளவு நடைமுறைகளுக்குப் பிறகுதான் அது மக்கள் பயன்பாட்டுக்கு வரமுடியும். அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்!  

இளங்கோ கிருஷ்ணன்

Tags : Corona Vaccine 0n the Way ..!
× RELATED தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில...