வானவில் சந்தை

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

டிஜிட்டல் கணங்கள்

முதல் பொதுப் பயன்பாட்டு கேமரா 1900ல் ஜார்ஜ் ஈஸ்ட்மென்னால் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘ப்ரவுனி’ என்றழைக்கப்பட்ட அந்தக் கேமரா 1960கள் வரை விற்பனையிலிருந்தது. ப்ரவுனியின் அறிமுகத்திற்குப் பின்னான ஒரு நூற்றாண்டில், புகைப்படக் கருவி மிகப்பெரும் மாற்றங்களைச் சந்தித்தது. பயன்பாடு சார்ந்து மட்டுமல்லாது, வடிவம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தும் பெரிய பாய்ச்சல்களை அது நிகழ்த்தியது.

புகைப்படங்கள், அரசக் குடியினரும் பெரும் செல்வந்தர்களும், தங்களது வாழ்க்கைத் தருணங்களைப் பதிவு செய்து எதிர்கால சந்ததியினர் காணுமாறு செய்யும் ஆடம்பரம் என்பதிலிருந்து, எளிய மனிதரும் தங்களது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை படம்பிடித்துப் பாதுகாக்கும் வகையில் பரவலாகின.

எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்வின் எல்லாத் தருணங்களையும் பதிவு செய்யலாம் என்ற எண்ணத்தை டிஜிட்டல் கேமரா சாத்தியமாக்கியது. பிலிம் சுருள்களை அச்சடித்து, புகைப்பட ஆல்பங்களாகச் சேமித்து வைக்கத் தேவையில்லாமல் போனது. புகைப்படங்கள் வெறும் டிஜிட்டல் தகவல்களாகச் சேமித்து வைக்கப்படுகின்ற காலம் வந்தது.

உச்சகட்டமாக, 2000வது ஆண்டில், ஈஸ்ட்மென் ப்ரவுனியை அறிமுகப்படுத்தி ஒரு நூற்றாண்டு கழித்து, ஜப்பானின் ஷார்ப் (Sharp) நிறுவனம் உலகின் முதல் கேமரா கொண்ட செல்போனை அறிமுகப்படுத்தியது. மக்கள், தங்களது மொத்த வாழ்வையும் டிஜிட்டல் புகைப்படங்களால் நிறைக்க ஆரம்பித்தனர்.

ரேடியோ, கால்குலேட்டர், வாக்மேன் போன்ற பல தனிக்கருவிகளின் தேவையை இல்லாமல் ஆக்கிய ஸ்மார்ட் போன், கேமராவையும் கிட்டத்தட்ட அப்படி ஆக்கிவிட்டது என்றே சொல்லலாம். ஆனாலும், தொழில்முறை புகைப்பட வல்லுநர்கள் அதை முற்றிலும் நிராகரிப்பார்கள். தொழில்முறை புகைப்படங்களை எடுக்க சிறந்த கேமராக்களையே அவர்கள் பயன்படுத்துவார்கள். சிறந்த புகைப்படங்களுக்கு சிறந்த கேமராக்களே தேவை என்பது அவர்கள் வாதம்.

பிரத்யேகமான டிஜிட்டல் கேமராக்களோடு ஒப்பிடுகையில், ஒரு மொபைல் கேமராவில் என்னவெல்லாம் குறைகள் உள்ளன?

* மொபைல் கேமராக்களின் பிம்பப் பெரிதாக்கல் (Zooming) டிஜிட்டல் முறையில் செய்யப்படுவது. தொழில்முறைக் கேமராக்களில் பிம்பப் பெரிதாக்கல் ஆப்டிக்கல் லென்ஸ்கள் (Optical Lens) வழியாக நடக்கிறது. அதனால் புகைப்படத் தரம் உயர்வாக இருக்கும்.

* புகைப்படத் தரம், வேகம், ஆகியவை பிரத்யேகமான கேமராக்கள் அளவுக்கு மொபைல் போன்களில் இப்போது சாத்தியமில்லை. உண்மையில், முன்பிருந்த உடனடியாகப் படம்பிடிக்கக்கூடிய ஆட்டோ ஃபோக்கஸ் (Autofocus - அதுவாகவே பிம்பங்கள் துல்லியமாகத் தெரியுமாறு சரிசெய்து கொள்ளும் திறன்) கேமராக்களையே மொபைல் போன் கேமராக்கள் இல்லாமல் செய்துவிட்டன. சிறிதளவேனும் தீவிரம் கொண்டவர்கள் கூட தொழில்முறைக் கேமராக்களையே நாடுவர். கேமராக்களை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.

பாய்ன்ட் அண்ட் ஷூட் (Point and Shoot cameras)

இவை பெரும்பாலும் எளிய மக்களும் கையாளத் தோதான வகையில் வடிவமைக்கப்பட்டவை. புகைப்படத் தொழில்நுட்பம் தெரியாதவர்களும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய எளிமையான செயல்முறைகள் கொண்ட கருவி. இவற்றில் தற்போது மிகப் பிரபலமானவை என்று பியூஜி பிலிம் (Fujifilm X100s), சோனி (Sony DSC Rx), கேனான் (Canon Powershot G1x), நிகான் (Nikon Cooolpix P7700), பானசோனிக் (Panasonic Lumix DMC-LX7) ஆகியவற்றைச் சொல்லலாம். இவை சில ஆயிரம் ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கின்றன. தொழில்நுட்பமே  விலையை தீர்மானிக்கிறது.  

டி.எஸ்.எல்.ஆர் (DSLR  Digital Single Lens Reflex)

கேமரா ஒரு பிம்பத்தைப் படம் பிடிக்க அடிப்படையான ஒன்று, கண்ணாடியாலான அதன் லென்ஸ் தான். டி.எஸ்.எல்.ஆரில் உள்ள 35mm அளவு கொண்ட சென்சார்கள் அந்த லென்ஸ் வழியாகக் கிடைக்கும் பிம்பங்களை, உயர் தரமான படங்களாகப் பதிவு செய்யும் திறன் கொண்டவை. அதனாலேயே, புகைப்படக் கலையைத் தீவிரமாகப் பயிலும் ஒருவருக்கு, டி.எஸ்.எல்.ஆர் மிகவும் இன்றியமையாத ஒரு கருவியாகிறது. இது உடல் பகுதி மற்றும் லென்ஸ் என்று இரண்டு பகுதிகளாக இருக்கிறது.

லென்ஸ் புகைப்படத் தரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதால், தேவைக்கேற்ப உயர்தரமான லென்ஸ்களை ஒரு டி.எஸ்.எல்.ஆரில் வாங்கிப் பொருத்திக்கொள்ளும் வசதியை அக்கருவி அளிக்கிறது. நிகான் (Nikon D5, D810, D500, D7200, D5500), கேனான் (Canon EOS 1DXII, EOS 5D Mark IV, EOS 80D), சோனி (Sony A68) ஆகியன மிகப் பரவலாக மதிக்கப் படுபவையாக இருக்கின்றன. இவை தோராயமாக, இருபத்தைந்தாயிரம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் வரையிலான விலையில் சந்தையில் கிடைக்கின்றன.

இவற்றை, கேமராவின் உடல் பகுதி தனியாகவும், லென்ஸ்கள் தனியாகவும் வாங்கிக் கொள்ளலாம். மிரர்லஸ் (Mirrorless)இவை கண்ணாடிப் பகுதி இல்லாத, டி.எஸ்.எல்.ஆர் போன்ற ஒரு கேமராதான். ஆனால், அவற்றை விட எடை குறைவானதும், சிறியதுமான புகைப்படக் கருவிகள் இவை. சிறிய சென்சார்களைக் கொண்டிருப்பதால் அவற்றை விடக் குறைந்த தரமுள்ள படங்களையே இவற்றில் எடுக்க முடிகிறது.

ஆனாலும், இவற்றின் தரம் உயர்ந்து கொண்டே வருகிறது. இவற்றிலும் லென்ஸ்களைத் தனியாகப் பொருத்திக் கொள்ளலாம். சோனி (Sony A7R, Alpha Nex6), ஒலிம்பஸ் (Olympus OM-D EM1, OMD EM5, E-PL5), பியூஜி பிலிம் (Fijifilm X Pro-1, X-E1, X-A1), பானசோனிக் (Panasonic GX7, Lumix G6) ஆகியவை மிகப் பிரபலமாக இருக்கின்றன. இவை தோராயமாக, முப்பதாயிரம் ரூபாயிலிருந்து பல லட்சம் ரூபாயிலான விலைகளில் கிடைக்கின்றன.

வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை

தேவையைப் பொருத்தே கருவியை தேர்ந்தெடுக்க வேண்டும். துல்லியம் (Resolution எத்தனை மெகாபிக்சல்கள் என்பது), சென்சார்கள் (Sensors CMOS/CCD), லென்ஸ்கள் (Lensஎத்தனை மி.மீ. அளவு கொண்ட லென்ஸ் என்பது) போன்றவை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை. அதோடு, எத்தனை மடங்கு பிம்பங்களைப் பெரிதாக்க முடியும் என்பதும், எல்.சி.டி காட்சித் திரையளவும் கூட கருத்தில் கொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஏற்கனவே இக்கருவிகளைக் கையாண்டு கொண்டிருக்கும் ஒருவருடன் கலந்து பேசி முடிவெடுப்பதே சிறந்தது.

(வண்ணங்கள் தொடரும்!)          

Related Stories: