×

10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வால் பள்ளிகளில் செயல்பட்ட காய்கறி சந்தைகள் செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு மாற்றம்

கோவில்பட்டி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு காரணமாக கோவில்பட்டியில் பள்ளிகளில் செயல்பட்டு வந்த நகராட்சி தினசரி சந்தைகள் செண்பகவல்லியம்மன் கோயில் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை கடந்த ஏப்ரல் மாதம் முதல் கூடுதல் பேரூந்து நிலையம், வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏ.வி. மேல்நிலைப்பள்ளிகளுக்கு இடமாற்றப்பட்டன. இங்கு மக்கள் சமூக விலகல் கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணமாக ஏப்ரலில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, ஜூன் 15ம்தேதி முதல் தமிழகம் முழுவதும் துவங்குகிறது. மாணவர்கள்  தேர்வு எழுதுவதற்கான மையங்களில் அனைத்து வசதிகளையும் மேற்கொள்ளுமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, ஏ.வி. மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதையடுத்து தற்போது பள்ளிகளில் செயல்பட்டு வரும் நகராட்சி தினசரி சந்தைகள் இடமாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி இரு பள்ளிகளில் செயல்பட்டு வந்த சந்தைகள், நேற்று முதல் ஒரே சந்தையாக கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் பின்புறமுள்ள மைதானத்திற்கு மாற்றப்பட்டு இயங்க தொடங்கியது. பொதுமக்கள் அங்கு சென்று காய்கறிகளை வாங்கி சென்றனர். தினசரி சந்தையில் பொதுமக்கள், வியாபாரிகள் நலன்கருதி அனைத்து கடைகளுக்கும் தற்காலிக பந்தல்,  குடிநீர் உள்ளிட்ட வசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   



Tags : Class 10 General Public ,Transfer ,Vegetable Markets ,Shenbagavalliyamman Temple ,Shenbagavalliamman Temple , Vegetable Markets Transferred,Shenbagavalliamman Temple, Class ,10 Public Schools
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் தாக்கல்...