கண்மாயில் தோட்டப்பயிர்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

சாயல்குடி: சாயல்குடி அருகே சிக்கல், வல்லக்குளம் பகுதியில் தோட்டப்பயிர்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களும், வல்லக்குளத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்களும் உள்ளன, விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். மழைக் காலத்தில் நெல், பருத்தி, மிளகாய், சிறுதானியங்களை முக்கிய பயிராக பயிரிட்டு வருகின்றனர்.

இந்ந நிலையில் கடந்தாண்டு பெய்த பருவமழையால் கண்மாய், பண்ணைக்குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் பெருகியது. இதனால் நெல், மிளகாய் நல்ல விளைச்சல் ஏற்பட்டது. கோடை விவசாயமாக செய்யப்பட்ட பருத்தி செடிக்கு ஏதுவாக கோடை மழை பெய்யாததால், கண்மாயில் கிடந்த பம்புசெட், குழாய் மூலமாக தண்ணீரை பாய்ச்சி வந்தனர். இதனால் கண்மாய்களில் கிடந்த தண்ணீர் முழுமையாக வற்றியது.இதனால் சிக்கல், வல்லக்குளம் கண்மாய் பகுதிகளின் மேற்பகுதி வறண்டது. வண்டல்மண் எனப்படும் கரம்பை மண் நிலமாக அமைந்துள்ளதால், இப்பகுதி விவசாயிகள் வெண்டை, கொத்தவரங்காய், கத்தரி, தக்காளி, கீரைகள், பாகற்காய், வெள்ளரி, பீக்கங்காய் உள்ளிட்ட தோட்டப்பயிர்களையும், ஆடுகளுக்கு தேவையான மின்னி எனப்படும் ஒருவகை செடிகளையும் ஆர்வமாக பயிரிட்டு வருகின்றனர்.

இது குறித்து வல்லக்குளம்  விவசாயிகள் கூறும்போது, சுமார் 250 குடும்பங்கள் வல்லக்குளம் கண்மாயில் தோட்டப்பயிர்களை பயிரிட்டுள்ளோம். பயிர்களுக்கு வேலி அமைத்து பாதுகாத்து வருகிறோம், கண்மாயில் தண்ணீர் வற்றி உள்ளதால் 2 ஆயிரம் ரூபாய் செலவழித்து கண்மாயில் சிறிய ஊற்றுகிணறு தோண்டி, அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி வருகிறோம், வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், ஊற்றில் தண்ணீர் வற்றிவருகிறது. இதனால் டிராக்டர் டேங்கர்களில் விலைக்கு வாங்கி ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. விளையும் விளைபொருட்களை தற்போதைய கொரோனா அச்சத்தால் சந்தைகளில் கடை விரித்து விற்க இயலாது, அதனால் வீட்டு உபயோகம் போக, மீதமுள்ள விளைபொருட்களை கடைகளில் விற்க உள்ளோம். வீடுகள் தோறும் ஆடுகள் உள்ளன. எனவே அவற்றிற்கு தேவையாக முக்கிய உணவு தாவரமான மின்னி செடிகளையும் வளர்த்து வருகிறோம்.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக விவசாயிகளுக்கு வேண்டி உதவிகளை செய்ய கிராமத்தில் சமூக இடைவெளி உள்ளிட்ட அரசு விதிமுறைக்கு உட்பட்டு சிறப்பு கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். அதன் மூலம் விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்ய முன்வர வேண்டும். கோடையில் தோட்டப்பயிர் விவசாயம் செய்ய ஏதுவாக கண்மாய் கரையோரத்தில் நிரந்தர ஆழ்துறை கிணறு மற்றும் தண்ணீர் சேமிப்பு தொட்டிகள் அமைத்து தரவேண்டும், மானியத்தில் ஸ்பிரிங்கர் தண்ணீர் தெளிப்பான், சொட்டு நீர் பாசன குழாய்கள், உரங்கள் வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories: