கேரளா செல்ல தொழிலாளர்களுக்கு அனுமதியில்லாததால் பராமரிப்பின்றி ஏல விவசாயம் பாதிப்பு: இருமாநில அரசுகள் கவனிக்குமா?

தேனி: கேரளாவுக்கு செல்ல ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு, அம்மாநில அரசு அனுமதி அளிக்காததால், பராமரிப்பின்றி ஏல விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தையொட்டி கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை உள்ளிட்ட தாலுக்காக்களில் சுமார் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் விவசாயம் நடந்து வருகிறது. ஏலக்காய் தோட்டங்களில் 75 சதவீதம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கு சொந்தமாக உள்ளது. இந்த தோட்டங்களில் விளையும் ஏலக்காய்களை பறிப்பது, நீர் மற்றும் மருந்து தெளித்தல் ஆகிய பணிகளை தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர், கம்பம், உத்தமபாளையம் பகுதி கூலித் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.கொரோனா பரவலை தடுப்பதற்காக, தமிழக கூலித் தொழிலாளர்கள் கேரளாவில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு செல்ல, அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. ஏலத் தோட்டங்களில் தற்போது ஏலச்செடிகளுக்கு நீர்தெளிப்பது, மருந்தடிப்பது ஆகிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் ஏலச்செடிகள் அழிந்து விடும் அபாயம் உள்ளது.

கேரள மாநிலத்தில் ஏலத்தோட்டங்களுக்கு செல்ல தற்போது ஏலத் தோட்ட உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு செல்லும் உரிமையாளர்களை 8 மணிநேரம் தனிமைப்படுத்தி பின்னர், விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதிக்கின்றனர். தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்காமல் உள்ளதால் ஒவ்வொரு ஏலத் தோட்ட விவசாயியும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே, இருமாநில அரசுகளும் கொரோனா ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் ஏலத் தோட்ட தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டம் சென்று விவசாய பணி செய்ய அனுமதி அளித்து ஏல விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: