அடிக்கடி பெய்யும் மழையால் கொப்பரை உலர்த்தும் பணி பாதிப்பு

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில், தற்போது அடிக்கடி மழை பெய்வதால் கொப்பரை உலர வைக்கும் பணி மந்தமடைந்ததுடன், அதன் உற்பத்தியும் குறைந்துள்ளது.  பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், கோட்டூர், சேத்துமடை, ராமபட்டிணம், அம்பராம்பாளையம், ஆழியார், நெகமம், வடக்கிபாளையம், கோவில்பாளையம் மற்றும் கிணத்துக்கடவு சுற்று வட்டார கிராமங்களில் தென்னை விவசாயம் அதிளவில் உள்ளது. தென்னைகள் பறிக்கப்படும் தேங்காய் உரிக்கப்பட்டு, அதை பிரித்துத்தெடுக்கப்படும் கொப்பரைக்கு வெளி மார்க்கெட்டில் அதிக கிராக்கி உள்ளது.   பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட களன்களில் கொப்பரை உலர வைக்கப்படுகிறது. கொப்பரையை உலரவைத்து, பின் எண்ணெய் மற்றும் பால்பவுடர் உள்ளிட்டவை தயாரிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள, ஐதராபாத் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், குறிப்பிட்ட நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் இருக்கும்போது, கொப்பரை உலரவைக்கும் பணி அதிகளவில் நடைபெறும்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 25ம் தேதி  முதல் தொடர்ந்து இரண்டு மாதமாக ஊரடங்கு உத்தரவு இருந்ததால், கொப்பரை உலர வைக்கும் பணிக்கு போதிய தொழிலாளர்கள் இல்லாததால் அதன் உற்பத்தி மிகவும் குறைந்தது.  சுமார் 57 நாட்களுக்கு பிறகு, கடந்த இரண்டு வாரமாக கொப்பரை உலர வைக்கும் பணி மீண்டும் துவங்கியது.  வெளியூர் தொழிலாளர்கள் வருகை இல்லாததால், உள்ளூர் பகுதி கூலித் தொழிலாளர்களை கொண்டு கலன்களில் கொப்பரை உலர வைக்கும் பணி நடைபெற்றது. ஆனால், இந்த மாதம் துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் குறைந்ததுடன் அவ்வப்போது மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் கொப்பரை உலர வைக்கும் பணி மந்தமானது. அடிக்கடி மழை பெய்வதால், களங்களில் உலர வைக்கப்படும் கொப்பரையை விரைந்து அப்புறப்படுத்த  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த கொப்பரைகளில் பூஞ்சானம் பிடித்துள்ளது. இதையடுத்து மழையிலிருந்து பாதுகாக்க, கொப்பரைகளை தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, பொள்ளாச்சி பகுதியிலிருந்து தினமும் சுமார் 300 டன் வரை கொப்பரை வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது உற்பத்தி மந்தமாக, விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் கொப்பரையின் அளவும் மிகவும் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: