மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் ரூ.50 அபராதம்: 9 பேரூராட்சிகளில் அதிரடி நடவடிக்கை

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ₹50 அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா  வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ்  பரவலை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக விலகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் 5 கட்டங்களாக ஊரடங்கு நடைமுறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் பல்வேறு தளர்வுகளை அரசு தற்போது ஏற்படுத்தியுள்ளது. இந்த தளர்வுகளை  ஒரு சிலர் முறையாக பயன்படுத்தாமல் ஏனோ தானோ என்று பொது இடங்களில் சுற்றி வருகின்றனர். குறிப்பாக, முகக்கவசம் அணிவது இல்லை. சமூக விலகளை கடைப்பிடிப்பதில்லை. சோப்பு போட்டு கை கழுவுவது இல்லை போன்ற அரசின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி வருவதால் தற்போது   கொரோனா  வைரஸ் வேகமாக  பரவத்தொடங்கியுள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிபாக்கம், சோளிங்கர், அம்மூர், கலவை, திமிரி, விளாம்பாக்கம் ஆகிய  9 பேரூராட்சிகளில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக விலகளை கடைப்பிடிக்க வேண்டும். வெளியே சென்று வந்தால் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் போன்ற விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வெளியே நடமாடினால் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். முகக்கவசம் அணியாமல் பேரூராட்சி பகுதியில் யாரேனும் வெளியே வந்தாள் ₹50 பேரூராட்சி நிர்வாகம் மூலம் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மளிகை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு, அணியாமல் கடைகளில் பணியாளர்கள், உரிமையாளர்கள் இருந்தால்  அந்தக் கடைக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டத்திலுள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் முழுமூச்சில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, பேரூராட்சி உயர் அதிகாரிகள்  கூறுகையில், பேரூராட்சி பகுதிகளில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணிகளில் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தேவை இன்றி யாரும் வெளியே சுற்ற வேண்டாம். அவ்வாறு, வெளியே வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் இல்லையொன்றால் ₹50 அபராதம் வசூலிக்கப்படும்.எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுங்கள்’  என்றனர்.

Related Stories: