×

மேல்நிலைத் தொட்டிகள் பராமரிப்பில்லை கேள்விக்குறியாகிறது பாதுகாப்பான குடிநீர்: அருப்புக்கோட்டை நகராட்சி கவனிக்குமா?

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சிக்கு தாமிரபரணி, வைகை குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் ஏற்றுவதற்காக நகராட்சி அலுவலகம், திருச்சுழி ரோடு, கரும்புலி வீரப்பன் பார்க், நேதாஜி ரோடு, ஜவஹர் சங்கம், அஜீஸ்நகர், டவுன் காவல்நிலையம் பின்புறம், மதுரை ரோடு, காந்தி மைதானம் அந்திக்கடை பொட்டல் ஆகிய பகுதிகளில் குடிநீர் மேல்நிலைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.  அவற்றில் குடிநீர் ஏற்றப்பட்டு அந்தந்தப் பகுதிகளுக்கு தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது,  இந்த குடிநீர் தொட்டிகளை மாதம் ஒருமுறை பராமரிப்பு செய்ய வேண்டும்.  அத்துடன் தொட்டியை சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர் தெளித்து பின்னர் குடிநீர் ஏற்றி விநியோகம் செய்ய வேண்டும்.  ஆனால் நகரில் உள்ள 9க்கும் மேற்பட்ட  மேல்நிலைத்தொட்டிகளை சுத்தம் செய்து மாதக்கணக்காகிறது. இதனால் தொட்டியில் உள்ள குடிநீரில் மண் தேங்கி கிடக்கிறது.  இதனால் குடிநீர் விநியோகம் செய்யும் போது தண்ணீர் கலராக மண்ணோடு சேர்ந்து வருகிறது. இதனால் தண்ணீர் கலங்கலாக வருவதாகவும்,  நாற்றம் எடுப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

 கரும்புலி வீரப்பன் பார்க்கில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டியில் ஏறி சுத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளன. எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் அது உள்ளது. இதனால் தொட்டியை சுத்தம் செய்ய முடியவில்லை என ஊழியர்கள் கூறுகின்றனர்.  ஆனால், மற்ற தொட்டிகளையும் அவர்கள் சுத்தம் செய்வதில்லை. தொட்டியை சுத்தம் செய்வதை விட்டுவிட்டு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் அதிக அளவுக்கு பிளிச்சிங் பவுடரை கலந்து விடுகின்றனர்.  இதனால் தண்ணீர் குடிக்க முடியாமல் பிளிச்சிங் பவுடர் நாற்றம் எடுப்பதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளை மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : municipality ,Aruppukkottai , Overhead tanks , maintained Questionable drinking water, municipality ,Aruppukkottai look
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை