செய்யாறு சிப்காட் பகுதியில் 3,500 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க வாய்ப்பு: விரைவில் களஆய்வு என தகவல்

திருவண்ணாமலை: சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. தேசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் தினமும் வந்துசெல்லும் மிகப்பெரிய விமான நிலையமாகும். சராசரியாக, நாளொன்றுக்கு 250 விமானங்கள், இங்கு வந்துசெல்கின்றன. ஆண்டுக்கு 2 கோடி பயணிகள் மீனம்பாக்கம் விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். எனவே, மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டிய நெருக்கடி பல ஆண்டுகளாக உள்ளது. மேலும், சென்னைக்கு அருகே புதிய பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதற்கான முயற்சியில், இந்திய விமான ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.ஆனால், புதிய விமான நிலையம் அமைக்க ஏற்கனவே ஸ்ரீபெரும்பதூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால், நிலங்களை கையகப்படுத்துவதில் கடும் சிக்கல் ஏற்பட்டன. விளை நிலங்களை கையகப்படுத்த பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஒரே பகுதியில் போதுமான இடம் கிடைப்பதிலும் சிக்கல் நீடித்தது.எனவே, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க இந்திய விமான ஆணையமும், தமிழக அரசுமும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. வெம்பாக்கம் தாலுகா மாத்தூர் கிராம பகுதியில் செய்யாறு சிப்காட் இயங்கி வருகிறது.

தற்போது சிப்காட் அமைந்துள்ள பகுதிக்கு எதிரில், ஏற்கனவே அரசுக்கு சொந்தமான 1,500 ஏக்கர் நிலம் உள்ளது. கூடுதலாக 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 13 கிமீ தொலைவில் மாத்தூர் கிராமம் அமைந்திருக்கிறது. எனவே, இங்கிருந்து சென்னையை சாலைவழியாக இணைப்பது மிகவும் எளிதானதாகும். மேலும், செய்யாறில் இருந்து 18 கிமீ தொலைவிலும், வந்தவாசியில் இருந்து 24 கிமீ தொலைவிலும் இந்த பகுதி அமைந்திருக்கிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள எட்டு வழிச்சாலையும், மாத்தூர் பகுதி வழியாகவே கடந்து செல்லும் வகையில் திட்டமிட்டிருந்தனர். எனவே, புதிய விமான நிலையம் இந்த பகுதியில் அமைந்தால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு சாலை வழியாக செல்வது எளிதாகும் என கூறப்படுகிறது. அதோடு, தற்போது விமான நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மாத்தூர் பகுதியில் உள்ள பெரும்பாலான நிலம் விளைச்சல் இல்லாத தரிசு நிலம் என்பதாலும், ஏற்கனவே சிப்காட் அமைந்திருப்பதாலும் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருக்காது என அரசு கருதுகிறது.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது: சென்னையையொட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமைக்க போதுமான இட வசதி எங்கெங்கு இருக்கிறது என ஏற்கனவே அரசு ஆராய்ந்தது. அதில், உத்தேசமாக தேர்வு செய்யப்பட்ட 4 இடங்களில், செய்யாறு சிப்காட் பகுதியும் ஒன்றாகும்.விமான நிலையம் அமைக்க குறைந்தபட்சம் 3,500 ஏக்கர் நிலம் தேவைப்படும். எனவே, இந்த பகுதியில் அதற்கான வாய்ப்பு உள்ளது. எதிர்வரும் காலங்களில், சென்னை பெருநகரம் மேலும் வளர்ச்சியடையும். எனவே, செய்யாறு பகுதியில் விமான நிலையம் அமைவது பொருத்தமாக இருக்கும் என அரசு கருதுகிறது.நிலம் கையகப்படுத்துவது குறித்து, அதிகாரப்பூர்வமாக அரசிடம் இருந்து எந்த தகவலும் மாவட்ட நிர்வாகத்துக்கு வரவில்லை. இந்திய விமான ஆணைய ஆய்வுக்குழு முதற்கட்ட நேரடி ஆய்வு செய்த பிறகே, அந்த பகுதியில் விமான நிலையும் அமைக்க முடியுமா என்பது உறுதியாக தெரியும் என்றனர்.

* ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள எட்டு வழிச்சாலையும், மாத்தூர் பகுதி வழியாகவே கடந்து செல்லும் வகையில் திட்டமிட்டிருந்தனர்

* சென்னையை சாலைவழியாக இணைப்பது மிகவும் எளிதானதாகும்.

Related Stories: