ஈரோடு சாயப்பட்டறைகள் தொடர் விதிமீறல்: காவிரியில் சாயக்கழிவு கலப்பு அதிகரிப்பால் சமூக ஆர்வலர்கள் வேதனை!

ஈரோடு: ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, காவிரி ஆற்றில் சாயக்கழிவுகள் கலக்கப்படுவதாகவும், சாயப்பட்டறைகள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, காவிரி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பது அதிகரித்திருக்கிறது. 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்குவதால் விதிமுறைகளை மீறும் சாயப்பட்டறைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் 500க்கும் மேற்பட்ட சாய தொழிற்சாலைகளும், 30க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவது என்பது தொடர்கதையாக மாறியுள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக ஆலைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் சாயக்கழிவுகள் மற்றும் தோல் கழிவுகள் வெளியேறுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டிருந்தது. இதனால் காவிரி மற்றும் காலிங்கராயன் நீர் நிலைகள் மாசடையாமல் பாதுகாக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில், ஊரடங்கின் தளர்வின் விளைவாக தற்போது இந்த ஆலைகள் மீண்டும் இயங்க தொடங்கியிருகிறது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக கழிவுகள் மீண்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஈரோடு அக்ரகாரம் பகுதியில் இருக்கக்கூடிய திட்டக்காரன்பலம் வழியாக இதுபோன்ற கழிவுகள் வெளியேறி காவிரியில் கலந்து வருகிறது.

இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்து வந்தால் கூட, இந்த கழிவுகள் கலப்பதை இதுவரை தடுக்க முடியவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சாயக்கழிவுகளை வெளியேற்றுவதாக கூறி, மூன்று சாய ஆலைகளுடைய நீர் இணைப்பை துண்டித்து இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறிய இரு தினங்களிலேயே இன்று காலை முதல் மீண்டும் இதுபோன்ற சாயக்கழிவுகள் வெளியேறி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. துர்நாற்றத்துடன் பல்வேறு வண்ணங்களில் நுரை ததும்பி வரக்கூடிய இந்த கழிவுகள் அனைத்தும் நேரடியாக காவிரியில் கலந்து வருகிறது. இதனால் காவிரி நீரை குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே கண்துடைப்பிற்காக நடவடிக்கை எடுக்காமல், முழுமையாக ஆய்வு நடத்தி கழிவுநீரை வெளியேற்றக்கூடிய ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தான் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடைய கோரிக்கையாக உள்ளது. இந்த ஆலைகளை பொறுத்தவரையில் ஒரு சொட்டு கழிவுகளை கூட வெளியேற்றக்கூடாது என்பது தான் விதிமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: