கொரோனாவால் முடங்கிய பொது போக்குவரத்து ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டத்தை ஊக்குவிக்க மாநகராட்சி முடிவு

* சமூக இடைவெளியில் 150 மீட்டர்நடைபாதையும் அமைகிறது

 * இந்த ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டத்தின் மூலம் பொதுமக்கள் சென்னையில் நீண்ட தூரம் பயணிக்க முடியும்

சென்னை: கொரோனாவால் பொது போக்குவரத்து முடங்கியதை கருத்தில் கொண்டு சென்னையில் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டத்தை ஊக்குவிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தக்குமார் கூறியதாவது: சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 41 பணிகள் ரூ.894.69 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கால் நிறுத்திய பணிகள் தற்போது 384 பணியாளர்களுடன் துவங்கப்பட்டுள்ளது. தி.நகரில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணி, 62 நீர் நிலைகள் மற்றும் வில்லிவாக்கம் ஏரியை புனரமைக்கும் பணி, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், கண்ணம்மாப்பேட்டை எரியூட்டும் நிலையத்தை நவீனப்படுத்தும் பணி, வாகன நிறுத்த மேலாண்மை பணி, தி.நகரில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி, மாம்பலம் ரயில் நிலையம் முதல் தி.நகர் பேருந்து நிலையம் வரை ஆகாய நடைபாதை அமைக்கும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

மேலும், 9 சாலைகள் மற்றும் 8 சாலைகளில் நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 97 உட்புற சாலைப் பணிகள், சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 362 உட்புற சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் 15 இடங்களில் அரசு வழிகாட்டுதல் படி மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 18 இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதேபோல், 47 குளங்கள் புனரமைப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. ஊரடங்கு காரணமாக சென்னையில் பொது போக்குவரத்து முடங்கி உள்ளதால் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டத்தை ஊக்குவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் நிலையங்களில் மற்றும் 500 சைக்கிள்கள் உள்ளன.

மேலும் 80க்கும் மேற்பட்ட சைக்கிள் நிலையங்களை 1,500 சைக்கிள் கொண்டு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சென்னை மாநகர் பகுதியில் நீண்ட தூரம் பயணிக்க முடியும். இதை தவிர்த்து சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாக 150 மீட்டர் நடைபாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: