திருவிக நகர், தண்டையார்பேட்டை, பல்லாவரத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பெரம்பூர் கென்னடி சதுக்கம் குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த 65 வயது பெண், உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 31ம் தேதி பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, கடந்த 2ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மாலை திருவிக நகர் தாங்கல் மயானத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.              

* பெரம்பூர் அண்ணாசாமி தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான 87 வயது முதியவருக்கு கடந்த 4ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

* புளியந்தோப்பு கனகராயர் தோட்டம் பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3ம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 4ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.                     

* தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 8வது பிளாக் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர், இதய நோய் சிகிச்சைக்காக கடந்த மாதம் 23ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 26ம் தேதி அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

* பல்லாவரம் அடுத்த திருநீர்மலையை சேர்ந்த 75 வயது முதியவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மூச்சுத்திணறலால் குழந்தை சாவு

செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் புதுநகர் பிரதான சாலையை சேர்ந்தவர் குருநாதன். இவரது ஒன்றரை வயது குழந்தை கவுசிகா விஷால். பிறந்தது முதல் போதிய வளர்ச்சி இல்லாததால் தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், பாடியநல்லூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு ரத்த பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: