கடந்து செல்பவர்களால் அடிக்கடி உயிரிழப்பு: கானத்தூர் பக்கிங்காம் கால்வாயில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

துரைப்பாக்கம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் பகுதி மக்கள் ராஜிவ்காந்தி சாலையில் உள்ள நாவலூர், முட்டுக்காடு, படூர் மற்றும் தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு செல்ல வேண்டுமெனில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக அக்கரை சந்திப்பு, சோழிங்கநல்லூர், மேடவாக்கம் வழியாக மட்டுமே செல்ல முடியும்.

இதற்கு 15 கி.மீ. தூரம் சுற்றிச்செல்ல வேண்டும் என்பதால், அப்பகுதி மக்கள் அங்குள்ள 30 அடி அகலம் கொண்ட பக்கிங்காம் கால்வாயை கடந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.இவ்வாறு பக்கிங்காம் கால்வாயை கடக்கும்போது திடீரென நீரோட்டம் அதிகரிப்பதால், தண்ணீரில் மூழ்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், வேறு வழியின்றி பொதுமக்கள் இந்த கால்வாயை கடந்து சென்று வருகின்றனர்.  

கானத்தூர் எம்ஜிஆர் தெருவை சேர்ந்த காய்கறி வியாபாரி சுயம்பு மார்த்தாண்டம் (52) என்பவர், கடந்த மாதம் 31ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் செல்வதற்காக பக்கிங்காம் கால்வாய்யை கடந்தபோது, திடீரென நீரோட்டம் அதிகரித்ததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அதே பகுதியை சேர்ந்த ஹேமதுல்லா (26) என்ற இளைஞரும், அதே நாளில் இந்த கால்வாய்யை கடக்கும்போது நிலைதடுமாறி நீரில் மூழ்கினார். அவரை அப்பகுதி மக்கள் காப்பாற்றினர். இதேபோல், மற்றொருவரும் கால்வாயில் மூழ்கியபோது  அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், தங்களது பகுதியில் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே ஒரு தரைப்பாலம் அமைத்து தர வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கானத்தூர் பகுதி மக்கள் நாவலூர், முட்டுகாடு, படூர், போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சோழிங்கநல்லூர் சென்று, ராஜிவ்காந்தி சாலை வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இல்லையெனில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோவளம் சென்று அங்கிருந்து கேளம்பாக்கம் சென்று ராஜிவ்காந்தி சாலை வழியாக நாவலூர் சென்றடைய சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேறு வழியில்லாமல் பக்கிங்காம் கால்வாய்யை கடந்து செல்கின்றனர்.

இந்த பக்கிங்காம் கால்வாயை கடந்து நாவலூர் சென்றால் 2 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே வரும் என்பதால் அத்தியாவசிய தேவைக்காக வேறு வழியில்லாமல் மக்கள் இந்த கால்வாய்யை கடந்து செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் பலர் நீரில் மூழ்கி இறக்கின்றனர். எனவே, பக்கிங்காம் கால்வாயை கடந்து செல்ல இந்த பகுதியில் ஒரு தரைப்பாலம் அமைத்து தர வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: