கல்லூரி பேருந்து மோதியதில் ஊனமுற்ற வாலிபருக்கு 18.82 லட்சம் இழப்பீடு

சென்னை: சென்னையை சேர்ந்த ரூபன்ராஜ் (26), கடந்த 2016ம் ஆண்டு, ராமாபுரம் அருகே பைக்கல் சென்றபோது, அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ் இவர் மீது மோதியது. அதில், இவரது கை, கால், இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில், ரூபன்ராஜ், விபத்தால் தான் 50 சதவீதம் ஊனமுற்றோராக மாறி இருப்பதாகவும், இதனால் வேலைக்கு செல்ல முடியவில்லை எனவும் கூறி, தனக்கு, பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து உரிய இழப்பீடு வழங்க கோரி சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி சுதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து மாதம் ₹13,681 சம்பளம் வாங்கி வந்ததும், விபத்துக்கு பஸ் தான் காரணம் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பஸ்சின் இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரருக்கு ரூ.18 லட்சத்து 82 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும், என உத்தரவிட்டார்.

Related Stories: