சென்னையில் கொரோனாவால் ஜூன் 4ம்தேதி வரை 398 பேர் உயிரிழப்பு: 50% மரணங்களை மறைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்

* திடுக்கிடும் தகவல் அம்பலம்

சென்னை: சென்னையில் கடந்த ஜூன் 4ம் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 398 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 50 சதவீத மரணத்தை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மறைத்து விட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் 4ம் தேதி நிலவரப்படி சென்னையில் 18,693 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9,392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 8,947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 188 பேர் மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்ட 50.8 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

48.4 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,388 பேரும், தண்டையார்பேட்டையில் 2,261 பேரும், தேனாம்பேட்டையில் 2,136 பேரும், கோடம்பாக்கம் 2,123, திரு.வி.க நகரில் 1,855 பேர், அண்ணாநகரில் 1,660 பேர், அடையாறு 1,042 பேர், வளசரவாக்கம் 975 பேர், அம்பத்தூர் 684 பேர், திருவொற்றியூர் 670 பேரும், சோழிங்கநல்லூர் 399 பேர், பெருங்குடி 334 பேர், மாதவரம் 490 பேரும், மணலி 259 பேரும், ஆலந்தூர் 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்  பலர் உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தப்படும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு தனிமையில் இருப்பவர்களில் பலர் திடீரென்று மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் அவர்கள் உயிரிழந்து விடுகின்றனர். மேலும் சிலர் வரும் வழியிலே உயிரிழந்துவிடுகின்றனர். இதன்படி பார்த்தால் சென்னையில் தினசரி 20க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுவதாக மூத்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனையில் தினசரி 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தற்போது வரை சென்னையில் 167 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தினசரி 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் இறப்பு தொடர்பாக உண்மை தகவல்களை மறைப்பதாக மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சென்னையில் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். இது தொடர்பாக சென்னையில் உள்ள உளவுத்துறை அதிகாரிகள் கேட்டபோது கடந்த 4ம் தேதி வரை 398 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளதாக திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மருத்துவர்கள் கூறியதாவது: சென்னையில் மூச்சுதிணறல் உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களில் பலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் உயிரிழந்து வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமல் உடலை உடனடியாக ஒப்படைத்து விடுகின்றனர். மேலும் சிலருக்கு ெகாரோனா பரிசோதனை செய்தாலும் அது தொடர்பாக வெளியிடாமல் மறைத்து விடுகின்றனர். சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி இரவு 7.10 மணிக்கு எண்ணூர் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். அவர் காலை 7.40 மணியளவில் இறந்து விடுகிறார்.

அவருடைய  இறப்பு தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட இறப்பு அறிக்கையில் ஒரு ஓரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் என்று முதலில் எழுதியுள்ளனர். அதன் பிறகு அதை சிவப்பு மையால் அடித்து விட்டு அவருக்கு கொரோனா இல்லை. மேலும் தவறாக எழுதிவிட்டோம் என்று கூறி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இதே நிலை தான் தொடர்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  4 அல்லது 5 நாட்கள் சிகிச்சை எடுத்த பிறகு உயிரிழப்பவர்களை வேறு வழியில்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அறிவிக்கின்றனர். இவ்வாறு சில மணி நேரங்களில் உயிரிழப்பவர்களை முறையாக அறிவிப்பது இல்லை.

எனவே சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பல்வேறு நோயினால் உயிரிழப்பவர்கள் அனைவருக்கும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதன் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு அவர்களின் உடலை ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்தால் தான் உண்மையாக எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: