மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் மகள் நேத்ராவின் உயர் கல்வி செலவு :தமிழக அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: மதுரை மாவட்டத்தை சேர்ந்த சலூன் கடைக்காரரின் மகள் நேத்ராவின் சேவையை பாராட்டி அவரது உயர் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்ைற தடுக்க பல்வேறு தீவிர நோய் தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசோடு இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், தன்னார்வலர்களும் கொரோனா நிவாரண பணியில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்டம், மேலமடை வண்டியூர் மெயின் ரோடு, சலூன் கடை நடத்தி வரும் மோகன் என்பவர், தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை மகளின் வேண்டுகோளுக்கிணங்க, ஏழை, எளிய மக்களுக்கு உணவு  பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்க செலவிட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கால படிப்பிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில், நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும். நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

Related Stories: