பூச்சிக்கொல்லி தெளித்தும் பலன் இல்லை ஒரு வாரத்தில் உருமாற்றம் அடைந்த வெட்டுக்கிளிகள்: முற்றிய இலைகளையும் இரையாக்குவதால் விவசாயிகள் அச்சம்

குலசேகரம்: திருவட்டாறு அருகே பூச்சிக் கொல்லி தெளித்த பின்னரும், கட்டுப்படாமல் உருமாற்றம் அடைந்துள்ள வெட்டுக்கிளிகள் முற்றிய இலைகளையும் தாக்குவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். குமரி மாவட்டம் திருவட்டாறை அடுத்த வெட்டுக்குழி பகுதியில் கடந்த ஒரு வாரம் முன்பு செடிகள் மற்றும் வாழைகளில் ஒரு வகையான வெட்டுக்கிளிகள் காணப்பட்டது.  பெரிய வாழை இலைகள் மற்றும் செடிகள், மரங்களின் தளிர்கள் இந்த வெட்டுக்கிளிகளால் அரிக்கப்பட்டது. எனவே, பாலைவன வெட்டுக்கிளிகளாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து, வேளாண்மை அறிவியல் மைய அதிகாரிகள் ஆய்வு  செய்தனர். வாழைகள், செடிகளில் இருந்த  வெட்டுக்கிளிகளை படம் எடுத்து கோவை வேளாண்மை பல்கலை கழக பூச்சியியல் துறைக்கு அனுப்பினர்.

அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் வடஇந்தியாவில் பாதிப்பு ஏற்படுத்திய பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை. சாதாரண வெட்டுகிளிகள்தான். இதற்கு மருந்து தெளித்தால் கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தனர். இதன்பின், வேளாண் குழு அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தனர். இதனையடுத்து பலரும் இந்த பூச்சி கொல்லி மருந்தை வாங்கி தங்களது தோட்டத்தில் உள்ள செடிகளில் தெளித்தனர். ஆனாலும் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்கம் குறையவில்லை. தற்போது இந்த வெட்டுக்கிளிகள் ஒரு வாரத்திற்கு  பின்னர் உருமாற்றம் அடைந்துள்ளன.  சிறிய அளவில் இருந்த வெட்டுக்கிளிகளின் இறக்கைகள் பெரிதாகி, உருவமும் பெரிதாகி சிவப்பு கலரில் உருமாற்றம் அடைந்துள்ளது.

தளிர்களை மட்டும் சாப்பிட்டு வந்த அவை மரங்களின் முற்றிய இலைகளையும் தற்போது அரித்து சேதப்படுத்த தொடங்கியுள்ளன.  பெரிய மரங்களின் இலைகளும் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்கு தப்பவில்லை. ஒரு வாரத்தில்  பெரிய அளவாக உருமாறியுள்ளதால் இதுதான் அபாயமான வெட்டுக்கிளியாக மாறுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே  இதனை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: