சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற பாஜ-அதிமுக அரசுகள் கைகோர்த்துள்ளன: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ெவளியிட்ட அறிக்கை:  சேலம் முதல் சென்னை வரையிலான எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று, கொரோனா பேரிடர் காலத்திலும் உச்சநீதிமன்றத்தில் மத்திய பா.ஜ. அரசு முறையிட்டிருப்பதற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்பே எட்டுவழிச்சாலைப் பணிகள் நடைபெறும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் கூறியிருப்பது அகங்காரத்தின் வெளிப்பாடு.

தமிழகத்தில் 39-க்கு 38 தொகுதிகளிலும்-குறிப்பாக, இந்தத் திட்டத்தின் பாதிப்பு உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வியை அ.தி.மு.க. சந்தித்தது. உடனே அந்த வாக்காளர்களைப் பழிவாங்க சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் இந்த மேல்முறையீடு விசாரணைக்கு வந்த போது, பலமுறை தடையுத்தரவு பிறப்பிக்க மறுத்தும் -  மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் உள்நோக்கத்துடன் கைகோர்த்துக்கொண்டு, திரும்பத் திரும்ப உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டி எப்படியாவது இந்த 10 ஆயிரம் கோடி ரூபாய் சாலைத் திட்டத்தை நிறைவேற்றி, தமது சுயநலப் பசியை நிறைவேற்றிக் கொண்டு விட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்ற புதிய வாதத்தை வைத்து ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். 10 ஆயிரம் கோடி ரூபாய்க்குள் ஒளிந்திருக்கும் மர்மத்தால், தான் போட்ட விவசாயி வேடத்தை மேல்முறையீடு மூலம் கலைத்து விட்டு-மக்கள் விரோதத் திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் பழனிசாமி அவசரப்படுகிறார்; ஆத்திரப்படுகிறார். இத் திட்டத்தை நிறைவேற்றுவதை மத்திய - மாநில அரசுகள் உடனடியாகக் கைவிட்டு, அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  எத்தனையோ முன்னுரிமைப் பணிகள் அணிவகுத்து முன் நிற்க, இந்தத் திட்டத்தை மட்டும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதை நிறுத்திக் கொண்டு, மக்களுக்குக் குறைந்தபட்ச நிம்மதியையாவது தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: