தமிழகம், கேரளாவில் தேவை அதிகரிப்பு: முட்டை விலை உயர்வு

நாமக்கல்: தமிழகம் கேரளாவில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், நாமக்கல்  மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் முட்டை விலை 35 காசுகள் உயர்த்தப்பட்டு 435  காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  நாமக்கல் மண்டலத்தில், கடந்த ஒரு  வாரமாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினமும் 5 காசுகள், 10  காசுகள் என்ற அளவில் முட்டை விலையை என்இசிசி உயர்த்தி வருகிறது.  இந்நிலையில், நேற்று ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை, அதிரடியாக  35 காசுகளாக என்இசிசி உயர்த்தியது.

இதனால் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல்  விலை 390 காசில் இருந்து, 425 காசாக உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கில்  அளிக்கப்பட்ட தளர்வின் காரணமாக, தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும்  திறக்கப்பட்டு விட்டது. மேலும் முட்டையின் தேவையும் தமிழகம் மற்றும்  கேரளாவில் தற்போது அதிகரித்து வருகிறது.  இதனால் முட்டை விலை  உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் முட்டை விலையில் 70 காசுகள் வரை  உயர்ந்துள்ளது. இதுகுறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், ‘முட்டை உற்பத்தி  நாமக்கல் மண்டலத்தில் தினமும் 50 லட்சம் வரை குறைந்துள்ளது. அதேசமயம் முட்டையின்  தேவை தமிழகம், கேரளாவில் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் விலை  உயர்த்தப்பட்டுள்ளது,’ என்றனர்.

Related Stories: