×

கொரோனா பாதிப்பை காரணம் காட்டி 3 மாசமா லீவே தராம வேலை வாங்குறாங்க..கூட்டுறவு ரேஷன்கடை ஊழியர்கள் குமுறல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து கடந்த 3 மாதங்களாக விடுமுறையே இல்லாமல் வேலை வாங்குவதாக கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்கள் புலம்புகிறார்கள். ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாதத்தின் முதல் மற்றும் 2வது வெள்ளிக்கிழமை விடுமுறை. 3வது மற்றும் 4வது வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. கொரோனா காரணமாக 3 மாதமாக தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் இலவச பொருட்களை வழங்கி வருகிறது. இதையொட்டி, விடுமுறை நாட்களில் கூட ஊழியர்களை லோடு இறக்கி வைக்க வேண்டும் என்று பணிக்கு வர சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்களின் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் 15ம் தேதிக்கு பிறகு, பொது விநியோக திட்ட இணைப்பதிவாளர் பரிந்துரையை பின்பற்றி, உணவுத்துறை ஆணையர், கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களின் விடுமுறை தினத்தன்று அடுத்த மாதத்திற்கு உண்டான ஒதுக்கீடான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற கட்டுப்பாட்டு பொருட்களை இறக்குவதற்காக கடையை திறந்து வைக்க அதிகாரிகள் கூறி வருகிறார்கள்.இதனால், 3 மாதமாக ஒரு நாள் விடுமுறை கூட எடுக்க முடியாமல் வேலை செய்யும் நிலை உள்ளது. அமுதம் நியாய விலைகடை ஊழியர்களுக்கு இந்த நெருக்கடியை தருவதில்லை. இந்த ஓரவஞ்சனை ஏன்?

எனவே பணி நாட்களில் மட்டுமே சரக்குகளை இறக்கி வைத்திட அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும். சரக்கு குறைவாக உள்ள ரேஷன் கடைகளை கண்டறிந்து, சரக்கு இறக்கிட வேண்டும். மாற்றாந்தாய் மனப்போக்குடன் கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் பேதம் பிரித்து பார்ப்பதை அரசு அதிகாரிகள் நிறுத்திட வேண்டும். இனி வரும் காலங்களில் கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களின் விடுமுறை ரத்து செய்யக்கூடாது. அதேபோன்று லாரி லோடு இறக்குவதற்கும் ரேஷன் கடை ஊழியர்களே கையில் இருந்து பணம் கொடுக்கும் நிலை உள்ளது.

இறக்கும் தொழிலாளர்களுக்கு கூட்டுறவு துறை அதிகாரிகளே பணம் வழங்க வேண்டும். ஆனால் அந்த பணத்தை அதிகாரிகள் எடுத்துக் கொண்டு, ரேஷன் கடை ஊழியர்களை கொடுக்க வைப்பதையும் அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்றனர்.

Tags : Corona ,employees bout , Corona, co-op, ration shop staff
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...