தமிழகத்தில் கோயில்கள் திறப்பு எப்போது? அரசின் பதிலுக்கு காத்திருக்கும் அறநிலையத்துறை

சென்னை: தமிழகத்தில் கோயில்களை எப்போது திறக்கலாம் என்பது தொடர்பாக அரசின் பதிலுக்காக அறநிலையத்துறை காத்திருக்கிறது.  கொரோனா ஊரடங்கால் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. அதேநேரத்தில் கோயில்களில் அர்ச்சகர்கள் மூலம் பூஜைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் கோயில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திருப்பதி கோயில் உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய கோயில்கள் திறக்கப்படவுள்ளது. இந்தநிலையில் கோயில்களில் சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க அறநிலையத்துறை திட்டமிட்டிருந்தது. ஒரு நாளைக்கு 150 பேர் முதல் 500 பேர் வீதம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக நிக் எனப்படும் தேசிய தகவல் மையம் மூலம் அறநிலையத்துறை இணையதளத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பக்தர்கள்  முககவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.  கோயிலின் நுழைவு வாயிலில் கைகளை கழுவ சோப், சானிடைசரின் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் 1 மீட்டர் சமூக இடை வெளி கடைபிடிக்கும் வகையில் கோயில்களில் கட்டம் போடப்பட்டுள்ளது. மேலும், கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பான அறிக்கை தயார் செய்து அறநிலையத்துறை சார்பில் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க கூடாது என்று திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் சார்பில் அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளது.  

அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் கோயில்களில் திறக்க ஆட்சேபம் இல்லாத நிலையில் அங்கு கோயில் திறக்க அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசின் பதிலுக்காக அறநிலையத்துறை காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வரை அரசு பதில் தராத நிலையில், கோயில்களை 8ம் தேதி திறக்க வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது என அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: