சென்னையில் 1,146 பேருக்கு கொரோனா தமிழகத்தில் ஒரே நாளில் 1,458 பேருக்கு பாதிப்பு: 19 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் நேற்று 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த 19 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 16,022 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டத்தில் அதில் அதிகபட்சமாக சென்னையில் 1,146 பேரும், செங்கல்பட்டு 95, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 1 நபருக்கும், அரியலூர், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, தஞ்சாவூர், நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், திண்டுக்கல், கிருஷ்ணகிரி 5, காஞ்சிபுரம் 16, கன்னியாகுமரி 5, கரூர் 4, மதுரை 7, நாகப்பட்டினம், விழுப்புரம் 6, ராமநாதபுரம், விருதுநகர் 4, திருவள்ளூர் 79,

திருவண்ணாமலை 3, திருவாரூர் 4, தூத்துக்குடி 14 என 1,423 பேருக்கும், இதைபோல் அரபு நாடுகள், சவூதி அரேபியாவில் இருந்து வந்த 6 பேர், கர்நாடகா 3, டெல்லி 4,  மகாராஷ்டிரா 13, கேரளா 3, அந்தமான், குஜராத் , பீகார், புதுச்சேரி தலா 1 நபருக்கும், ஆந்திரா 2 என 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆக மொத்தம் தமிழகம் மற்றும் வெளிநாடு, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என தமிழகத்தில் நேற்று 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன்படி இதுவரை 30,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 633 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்படி இதுவரை 16,395 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். இன்னும் மருத்துவமனையில் 13,503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும்  சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த  19 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 647 மாதிரியின் முடிவுகள் வரவேண்டியுள்ளது. இதுவரை 18,689 ஆண்கள், 11,446 பெண்கள், 17 திருநங்கைகள் என 30,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் உள்ளவரா?

கொரோனா நோய் தொற்று, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், முதியோர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. இருப்பினும் வீண் பயம் வேண்டாம் தினந்தோறும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ளவும். உடற்பயிற்சி, தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை தவறாமல் செய்ய வேண்டும். உணவில் தவறாமல் இஞ்சி, மஞ்சள், பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு மற்றும் மிளகு போன்றவை சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளவும். வைட்டமின் சி மிகுந்துள்ள கொய்யா, நெல்லிக்கனி, தக்காளி, எலுமிச்சை போன்றவை உட்கொள்ளவும். மேலும் ஜிங் எனப்படும் கனிம வகை ஊட்டச்சத்து மிகுந்த பருப்பு வகைகள் பால் சார்ந்த உணவுகள், முட்டை, முழுதானியங்கள் உட்கொள்ளவும். நிலவேம்பு அல்லது கபசுரகுடிநீரை முறையான வகையில் தயாரித்து பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

45 வயதுக்குள் 4 பேர் உயிரிழப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் அதிகம் பேர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று 45 வயதுக்குள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 43 வயது ஆண், 39 வயது ஆண், 30 வயது ஆண், 31 வயது ஆண் உயிரிழந்துள்ளனர்.

இறந்த 19 பேரும்சென்னை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் சென்னையை சேர்ந்த 12 பேர் உயிரிழந்த நிலையில் நேற்றும் சென்னையை சேர்ந்த 19 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அதில் 9 பேரும் அரசு மருத்துவமனைகளிலும், 10 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: