மேக் இன் இந்தியா திட்டத்தில் அவசரம் வேண்டாம் பாதுகாப்பை பத்தி மட்டுமே பேசாதீங்க பழங்காலத்துக்கு போக வைக்காதீங்க...

* வரியை உயர்த்தினால் தீர்வு கிடைத்து விடுமா?

* கவலையை வெளிப்படுத்துகிறது தொழில் துறை
Advertising
Advertising

சென்னை: மேக் இன் இந்தியா திட்டமெல்லாம் சரிதான். ஆனால், உள்நாட்டு தொழில்களை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு, அவசர கதியில் முடிவு எடுப்பது கூடாது என தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ‘‘உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மேக் இன் இந்தியா திட்டத்தில் ஏசிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உதாரணமாக, உள்நாட்டு தேவைக்காக 30 சதவீத ஏசி இறக்குமதி செய்யப்படுகிறது. இதை நாம் குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பிபிஇ சாதனங்கள் உற்பத்திக்கு பாராட்டு தெரிவித்தார்.

 உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தை வரவேற்றுள்ள தொழில்துறையினர், சில முடிவுகளில் அவசரம் காட்டக்கூடாது என்ற கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தொழில்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது: உள்நாட்டு உற்பத்தியை கட்டுப்படுத்த, வெளிநாட்டு பொருட்கள் மீது வரி விதிப்பதை சிறந்த உத்தியாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையிடம் சமர்ப்பித்திருந்த வரைவு திட்டத்தின்படி, ஏசி உற்பத்திக்கு முக்கியமான 9 உதிரி பாகங்கள் மீது, 50 முதல் 165 சதவீதம் வரியை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, ஏசி உதிரிபாகங்களுக்கு வரியை உயர்த்தி 2 ஆண்டு கூட ஆகவில்லை. அதாவது, 2018 செப்டம்பர் 26ம் தேதி, ஏசிக்கள் மீதான அடிப்படை சுங்க வரியை நிதியமைச்சகம் 2 மடங்காக உயர்த்தி 20 சதவீதம் என நிர்ணயித்தது. நாடு உள்ள தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், உள்நாட்டு உற்பத்தியை உயர்த்த வரி உயர்த்துவது மட்டுமே தீர்வாக அமையாது. சுமார் 50 ஆண்டுக்கு முன்பு, உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க இப்படிப்பட்ட வழிகளை தேடியிருக்கலாம். இப்போதைய சூழ்நிலை வேறு. இதனால் தொழில் போட்டி குறைந்து, ஏசி விலைதான் உயரும். இது மக்களின் தலையில்தான் விடியும். கொரோனா பரவல் உள்ள இக்கட்டான சூழ்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சப்ளை துண்டிக்கப்பட்டு விட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிபிஇ இங்கு உற்பத்தி செய்வது சரி. ஆனால், ஏசி, பிரிட்ஜ், பர்னிச்சர் போன்றவற்றை மேக் இன் இந்தியா திட்டத்தோடு போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.  தாராளமயமாக்கல் காரணமாக, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஏசி விற்பனை சந்தையில், மெட்ரோ நகரங்களை தவிர, பிற நகரங்களில் மட்டும் ஏசி விற்பனை பங்களிப்பு 50 முதல் 55 சதவீதம் உள்ளது. ஆடம்பர பொருள் பட்டியலாகவே மக்கள் இதை நினைக்கவில்லை. வரி உயத்தினால், உதிரி பாகங்களை விட முழுமையாக வடிவமைக்கப்பட்ட பொருட்களாக இறக்குமதி செய்வது மலிவாகிவிடும்.

எனவே, வரியை மட்டும் உயர்த்தி முட்டுக்கட்டை போடுவது, மேக் இன் இந்தியா திட்டத்தில் பிற நாட்டினர் முதலீடு செய்ய தயக்கம் காட்ட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும். உற்பத்திக்கான சூழ்நிலை இங்கு சாதகமாக அமைய வேண்டும். எல்லா நேரங்களிலும், எல்லா துறைகளிலும் இது எடுபடாது. எதிர்விளைவுகளை கூட ஏற்படுத்தலாம். இதை மத்திய அரசு உணர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றனர்.

இறக்குமதி வரி உயர்வுகள்  மக்கள் தலையில்தான் விடியும்

ஏசி மீதான சுங்க வரியை உயர்த்தி 2 ஆண்டு கூட முடியாத நிலையில், மீண்டும் ஏசி உற்பத்திக்கு பயன்படும் 9 உதிரி பாகங்கள் மீதான  வரியை 50 முதல் 165 சதவீதம் வரை உயர்த்த வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19ல் 120 கோடி டாலர் (9,120 கோடி) மதிப்பிலான ஏசி இறக்குமதியாகின. இது மொத்த இறக்குமதியில் 0.25 சதவீதத்துக்கும் குறைவுதான். கடந்த நிதியாண்டில் ஏசி இறக்குமதி 78.9 கோடி டாலர் (5,997 கோடி). தற்போதைய வரைவு  திட்டத்தில், பிசிபி கன்ட்ரோலர்,  மோட்டார், வெளிப்புற உலோக பாகங்கள்,  உட்புற பிளாஸ்டிக் பாகங்கள் போன்ற 6 பொருட்களுக்கு வரியை 20 சதவீதமாகவும்,  சர்வீஸ் வால்வ் 7.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும், கம்ப்ரசர் மீது  12.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.

இதனால் ஏசி  விலை அதிகமாகும். மக்கள் தலையில்தான் சுமை இறங்கும். இதுபோல், எல்லா பொருட்களுக்கும் வரியை உயர்த்துவது  மட்டுமே மேக் இன் இந்தியா திட்டத்துக்கு தீர்வல்ல. இதனால், எதிர்விளைவுகள்  ஏற்படும். ஒரு பகுதி நன்மையை மட்டுமே பார்க்கக்கூடாது, பாதிப்பையும் ஆராய வேண்டும் என்கின்றனர் தொழில் துறையினர்.

இந்தியாவா இருக்கணுமா? சீனாவா மாறணுமா?

உள்நாட்டு உற்பத்தியை மனதில் கொண்டுதான், பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்தது. சீனாவின் மலிவு பொருட்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்து விடுமோ என்ற அச்சமும் இதற்கு காரணம்.  இதேபோன்ற எண்ணத்துடன், ‘பாதுகாப்பு பொறி’யில் மீண்டும் மத்திய அரசு விழுந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இத்தகைய தடாலடி முடிவுகள் இந்தியாவை இன்னொரு சீனா போல ஆக்கிவிடக்கூடும். சீனாவில் இருந்து 45 சதவீதம்தான் ஏசி இறக்குமதியாகிறது. எஞ்சியவை தாய்லாந்து, கொரியா , ஜப்பான்,  சிங்கப்பூர், லண்டன், ஜெர்மனி, அமெரிக்காவில் இருந்து வருகின்றன. சீனாவை மட்டுமே மனதில் கொண்டு எடுக்கும் முடிவு, மற்ற நாடுகளுடனான இறக்குமதி வர்த்தகத்துக்கு தடை போட்டு விடும் அபாயம் உள்ளது என, மத்திய வர்த்தக துறை முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Related Stories: