வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவி வரைவாளர் பணியிடங்களை நிரப்ப தடை: பொதுப்பணித்துறை உத்தரவு

* இளநிலைவரை தொழில் அலுவலர் 550, உதவி வரை தொழில் அலுவலர் 200 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சென்னை: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவி வரைவாளர் பணியிடங்களை நிரப்ப தடை விதித்து பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் மண்டல தலைமை பொறியாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  தமிழக பொதுப்பணித்துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர், உதவி வரைதொழில் அலுவலர், முதுநிலை வரைதொழில் அலுவலர், தலைமை வரைதொழில் அலுவலர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு பொறியியில் சார்பு என்ற துணை பிரிவின் கீழ் வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியிடங்களில் இளநிலை வரைதொழில் அலுவலர் 550, உதவி வரைதொழில் அலுவலர் 200 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், கூடுதல் பணிச்சுமையில் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இதைதொடர்ந்து சார்பில் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வரைதொழில் அலுவலர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்தது.. இதையேற்று, இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்பும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இனி வருங்காலங்களில் 50 சதவீத பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமும், 50 சதவீத பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், உதவி வரைவாளர் காலி பணியிடங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நேரடி நியமனம் செய்ய சம்பந்தப்பட்ட தலைமை பொறியாளர்/கண்காணிப்பு பொறியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, உதவி வரைவாளர் காலி பணியிடங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நிரப்பிக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதி இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: