வடமாநில தொழிலாளர்கள் சென்றுவிட்ட நிலையில் தொழில் உற்பத்தி பாதிப்படையாமல் இருக்க தமிழக தொழிலாளர்களை பயன்படுத்துங்கள்

* தொழிலதிபர்களுக்கு முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

சென்னை:  தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்தும் `ஒளிரும் தமிழ்நாடு’ - புதிய இயல்பு சூழ்நிலையில் முதன்மை மாநிலமாக மாறுவதற்கான டிஜிட்டல் மாநாட்டை முதல்வர் எடப்பாடி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.

 இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,ஊரகத் தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் பல்வேறு  துறைகளின் அரசு செயலாளர்கள், மூத்த அதிகாரிகள், இந்திய தொழில் கூட்டமைப்பினை சார்ந்த முன்னணி தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:  ஊரடங்குக்கு தளர்வுகளை அரசு வழங்கி வருகிறது.

மாறி வரும் சூழ்நிலையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. சூழ்நிலையை பொறுத்து, மேலும் தளர்வுகளை அரசு அறிவிக்கும்.  சமீபத்தில் வெளியான ஆய்வில், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக தெரிவித்துள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, பிணை சொத்தின்றி உடனடி கடன் வழங்கும் திட்டத்திற்காக 200 கோடி ஒதுக்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம், கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ்,  இதுவரை 955 நிறுவனங்களுக்கு 120 கோடி செயல்பாட்டு மூலதன கடனாக வழங்கப்பட்டுள்ளது.   

தொழில் துறையை பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசின் செயல் திட்டமாக, நான்கு முக்கிய இனங்களில் கவனம் செலுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் நான் அறிவுறுத்தியுள்ளேன். கொரானா தொற்று பரவலின் விளைவாக, வெளி மாநில தொழிலாளர்கள் பலர் தங்களின் சொந்த மாநிலத்திற்கு திரும்ப சென்றுள்ளார்கள்.

எனினும், தொழில் உற்பத்தி பாதிப்படையாமல் இருக்க, தமிழ்நாட்டை சார்ந்த தொழிலாளர்களை பயன்படுத்தி, இயல்பு நிலையை எய்த தொழில் துறையினர் முயற்சிக்க வேண்டும்.

இதற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு நிறுவனத்துடன் இணைந்து தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள்  அளித்திட தயாராக உள்ளது.இது மட்டுமின்றி, வணிகம் புரிதலை எளிதாக்கிட, ஏற்கெனவே பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அளவிலும் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, தொழிலாளர் துறை, மருந்தியல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவையிடம் இருந்து, தொழில் அனுமதிகள் பெருவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்படும். இதன்மூலம் தமிழ்நாட்டில், தொழில் முதலீட்டிற்கான சாதகமான சூழ்நிலை மேலும் வலுவடையும்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: