கணக்கிடும் முறையை முற்றிலும் மாற்றி மக்கள் மீதான மின்கட்டண பளுவை குறைக்க வேண்டும்: அரசுக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டுமாத மின் நுகர்வாக பிரிக்காமல் கட்டணம் வசூலிப்பது தான் மக்கள் படும் வேதனைக்கு அடிப்படை காரணமாகும். இதை அதிமுக அரசு நியாயப்படுத்தி பேசுவது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுகிற செயலாகும். ஏற்கனவே பொது ஊரடங்கு காரணமாக வேலை இழந்து, வருமானத்தை இழந்து, வாழ்வாதாரத்தை பறிகொடுத்த நிலையில் இருக்கும் மக்கள் மீது இத்தகைய சுமையை சுமத்துவதை விட ஒரு மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. தற்போது மின்வாரிய அணுகுமுறையின் படி கணக்கிட்டால் வழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு அதிகம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும்.

Advertising
Advertising

ஊரடங்கால் வீட்டுக்குள்ளே முடங்கி, வேலையின்றி தவிக்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் இவ்வளவு தொகையை எவ்வாறு கட்ட முடியும்?. ஏற்கனவே வாழ்வாதாரத்துக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களிடம் இப்படி பகல் கொள்ளை அடிக்கலாமா? இத்தகைய நடவடிக்கை எரிகிற அடுப்பில் கொள்ளியை பிடுங்கியது போல் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதோடு, எனது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, மின் கட்டணத்தை கணக்கிடுகிற முறையை முற்றிலும் மாற்றி மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பளுவை குறைக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: