ஜெ.அன்பழகன் எம்எல்ஏ உடல்நலம் மு.க.ஸ்டாலின் நேரில் விசாரிப்பு: டாக்டர்களிடம் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்

சென்னை: ஜெ.அன்பழகன் எம்எல்ஏ உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் விசாரித்தார். டாக்டர்களிடம் அன்பழகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏவும், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஜெ.அன்பழகன் (61), கடந்த 2ம் தேதி சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முதலில் வென்டிலேட்டர் மூலம் 80 சதவீதம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு 67 சதவீதம் ஆக்சிஜன் மட்டுமே செயற்கையாக அளிக்கப்பட்டது.

Advertising
Advertising

மேலும் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு 45% ஆக்சிஜன் மட்டுமே செயற்கையாக அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரின் உடல் நலம் முன்னேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “ஜெ.அன்பழகன் விரைந்து நலம் அடைவார், அரும்பணியாற்றுவார்’’ என்று தெரிவித்து இருந்தார். மேலும், மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெ.அன்பழகன் உடல் நலன் குறித்து நாள்தோறும் தொலைபேசி வாயிலாக விசாரித்தறிந்து வந்தார்.

மு.க.ஸ்டாலின் நேற்று காலை, மருத்துவமனைக்கு நேரில் சென்று, ஜெ.அன்பழகனுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவக் குழுவினர்களான மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மருத்துவர் முகமது ரேலா, மருத்துவர் இளங்குமரன் ஆகியோரிடத்தில், அவரது உடல்நலன் குறித்தும்-அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். அவருடன் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார். மருத்துவர்களுடனான சந்திப்பின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., உடனிருந்தார்.

Related Stories: