×

காசிமேடு மீன் இறங்கு தள பகுதிகளில் இன்று முதல் சில்லறைமீன் விற்பனைக்கு தடை: அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

சென்னை: மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் இறங்கு தள பகுதிகளில் பொதுமக்களுக்கு மீன் சில்லறை விற்பனை செய்வது, வரும் இன்று (7ம் தேதி) முதல் தடை செய்யப்படுகிறது. எனினும், சில்லறை வியாபாரிகள் துறைமுக பகுதியில் இருந்து மீன்களை வாங்கி சில்லறை விற்பனைக்கென மீன்பிடி துறைமுகத்தின் வடக்கு பகுதியில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 200 கடைகளில் மீன்களை விற்பனை செய்யலாம். தற்போது மீன்பிடி துறைமுக பகுதியில், சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மட்டும்  இந்த புதிய இடத்தில் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், பொதுமக்கள் இந்த சில்லறை விற்பனை கடைகளில் மட்டுமே மீன் வாங்க அனுமதிக்கப்படுவார்கள். சில்லறை விற்பனை காலை 5 மணி முதல் காலை 11 மணி வரை மட்டுமே நடைபெறும். எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் மீன் ஏலம் விடும் இடத்திலோ,  இறங்கு தளத்திலோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  பொதுமக்கள் மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் வாங்க செல்வதை தவிர்த்து சில்லறை விற்பனைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மீன் வாங்கவும், கூட்டம் கூடாமல் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கவும், தவறாமல் முக கவசம் அணிந்து கொரோனா நோய் தொற்று பரவாமல் தங்களை தற்காத்து கொள்வதுடன், மற்றவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : fish landing site ,Minister ,Kasimedu ,Jayakumar Kasimedu ,Minister Jayakumar ,Sale , Kasimedu, fish landing site, retail fish sales, Minister Jayakumar
× RELATED காசிமேடு அருகே மீன் பிடித்தபோது...