கொரோனா தொற்று பரவல் தடுப்பு என்பது மக்கள் இயக்கமாக மாறினால்தான் கட்டுப்படுத்த முடியும்: கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

* முகக்கவசம் அணிவது என்பது தேசிய கடமை என்று உணர்ந்து நமக்கும் நோய் வராது மற்றவர்களுக்கும் நோய் வராமல் தடுக்க முடியும் என்று நினைக்க வேண்டும்

Advertising
Advertising

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு என்பது மக்கள் இயக்கமாக மாறினால் தான் முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை, சோலையப்பன் தெரு, தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் மற்றும் நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வருவாய் நிர்வாக ஆணையரும் கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் நேரு நகர் பகுதியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தரப்படக்கூடிய மருந்துகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் நடமாடும் கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு செய்தார். அப்பகுதியில் உள்ள அனைவரையும் பாதுகாப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்று அதிகம் உள்ள மண்டலமான தண்டையார்பேட்டை போன்ற பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் உள்ளனர். அவர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். மேலும் பொதுமக்களுக்கு முகக்கவசம் கொடுக்க சொல்லியிருக்கிறார்கள். சென்னையில் 26 லட்சம் மக்களுக்கு 52லட்சம் முகக்கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர் தலைமையில் 5 அமைச்சர்கள், 3 மண்டலமாக பிரிக்கப்பட்டு பணியாற்ற உள்ளனர். அதேபோன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநகராட்சியுடன் இணைந்து 15 மண்டலங்களிலும் பணியாற்ற உள்ளனர். சென்னையில் தெருவாரியாக எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்று கணக்கெடுக்கப்படுகிறது.

சென்னையில் 39,539 தெருக்களில் இதுவரை பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பேர் 6,537 தெருக்களில்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 16 சதவீதம் தெருக்களில்தான் தொற்று உள்ளது. தற்போது 4,404 தெருக்களில்தான் கொரோனா தொற்று உள்ளது. அதற்குதான் மக்களிடையே தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், முதியவர்களை பாதுகாத்தல், தனிமைப்படுத்தல் தான் ஒரேவழி என்று கூறுகின்றனர்.  சென்னையில் 84% தெருக்களில் நோய் தொற்று இல்லை. இதுவரை வந்த தொற்றை குறைக்க அனைவரும் சேர்ந்து மக்கள் இயக்கமாக கொண்டு செல்கிறோம். அனைவரும் முகக்கவசம் அணிந்து ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் ஓமியோபதி, சித்தா போன்ற பல்வேறு மருந்துகள் கொண்டு பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 16 % தெருக்களையும் குறைத்து விடுவோம். மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இறப்பு  விகிதம் குறைவாக உள்ளது. அதையும் குறைக்க வேண்டும். அன்னை சத்யா நகர், திடீர் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நோயை விரட்டி அடித்தோம். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் என்பதால் முகக்கவசம் அணிந்து களப்பணியாற்றினால் போதும்.  சென்னையில் 16 % உள்ளது. அதை மக்கள் நம்ப வேண்டும். தேவையில்லாமல் மக்கள் பீதியடைய வேண்டாம். முகக்கவசம் அணியாதவர்கள் ஒரு கடமையாக உணர்ந்து அவர்களுக்கும் மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பாதுகாப்பு என்று நினைக்க வேண்டும். மேலும் பொதுக் கழிப்பறை, தண்ணீர் பிடிக்கும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

முகக்கவசம் அணிவது என்பது தேசிய கடமை என்று உணர்ந்து நமக்கும் நோய் வராது மற்றவர்களுக்கும் நோய் வராமல் தடுக்க முடியும் என்று நினைக்க வேண்டும். சென்னையில் தொற்று பரவாமல் தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது அலை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையில் 52 லட்சம் முகக்கவசம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலங்களில் உள்ள இதுவரை 7 முதல் 8 லட்சம் ெகாடுத்திருக்கின்றனர். அந்தந்த பகுதியில் 15 குழுக்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: