காவேரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தீவிரம்: 10 நாளில் தண்ணீர் கடைமடை செல்லும்: தமிழக அரசு தகவல்

சென்னை: காவேரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் இந்தாண்டு 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படவுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டும் சிறப்பு தூர்வாரும் பணி திட்டம் செயல்படுத்த தமிழக முதல்வர் ரூ.67.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.  இந்த சிறப்பு தூர்வாரும் பணிகளை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும், பணிகளை துரிதப்படுத்தி முடிக்கவும் 7 மாவட்டத்திற்கும் தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பணியை துரிதப்படுத்தி வருகின்றனர்.

மேலும், 7 மாவட்ட கலெக்டர்கள், 173 பொறியாளர்கள், 809 இயந்திரங்களும் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறப்பதற்கு முன் பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவிட்டார். ஆகவே, தூர்வாரும் பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி மட்டும் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் மூலம் இவ்வாண்டு அரிசி உற்பத்தி 1 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கடைமடை வரை தண்ணீர் செல்ல 25 நாட்கள் ஆகும். ஆனால், தற்போது சிறப்பு தூர்வாரும் பணிகளால் 10 நாளில் தண்ணீர் கடைமடை வரை விரைந்து செல்லும். ஆகவே, டெல்டா விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணிகளை செய்வதற்கு தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: