×

சேலத்தில் 2வது நாளாக 8 வழிச்சாலை திட்டம் எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: அமைச்சர்களுக்கு கண்டனம்

சேலம்: சேலத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக நேற்றும் விளை நிலங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம்-சென்னை இடையே 10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயத்தை அழிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். பின்னர், சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்ட அரசாணையை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் மேல் முறையீடு செய்துள்ளனர். கொரோனா பாதிப்பால், இந்த வழக்கு விசாரிக்கப்படாமல் இருந்தது. இச்சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன் சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

இதை கண்டித்து சேலம் பூலாவரி பகுதியில் நேற்று முன்தினம் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று 2வது நாளாக சேலம் குப்பனூர் சீரிக்காடு பகுதியில் விளை நிலத்தில் விவசாயிகள், தங்கள் குடும்பத்தாருடன் கருப்பு கொடி ஏந்தி 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என கூறிய தமிழக அமைச்சர்கள் கருப்பணன், கடம்பூர் ராஜூ ஆகியோரை கண்டித்தும் விவசாயிகள் கோஷமிட்டனர்.

விவசாயிகள் கூறுகையில், ‘‘விளை நிலங்களை அழித்து சாலை அமைக்க ஒருபோதும் விட மாட்டோம். உச்சநீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு எதிராக தீர்ப்பு வராது என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழக அமைச்சர்கள், தங்கள் துறைகளின் மீது கவனம் செலுத்தாமல், விவசாயத்தை அழிக்க துடிக்கிறார்கள்’’ என்றனர்.


Tags : protest ,Salem , Salem, 8 road project, Farmers demonstration, Ministers
× RELATED கொரோனா தொற்றால் இறந்த மூதாட்டி உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு