பெரியாறு அணைக்கு சென்ற தமிழக அதிகாரிகளுக்கு ‘தனிமை’: பரிசோதனை முடிவுக்கு பிறகே பணிக்கு அனுமதி கேரள சுகாதாரத்துறை நடவடிக்கை

கூடலூர்: பெரியாறு அணை பணிக்குச் சென்ற, தமிழகப் பொதுப்பணித்துறை ஊழியர்களை, அணைப்பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பில் கேரள சுகாதாரத்துறை தனிமைப்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை ஒட்டிய கேரளப்பகுதியில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணைக்கு, தேக்கடியிலிருந்து படகு மூலமாகவும், வல்லக்கடவு வனப்பகுதி வழியாக ஜீப் மூலமாகவும் செல்லலாம். கொரோனா ஊரடங்கால் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களை கேரளாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்துகின்றனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன், தமிழக பொதுப்பணித்துறை ஊழியர்கள் 2 பேர் பெரியாறு அணைக்கு பணிக்காக சென்றனர். தமிழக - கேரள எல்லைப்பகுதியில் உள்ள குமுளியில், அவர்களை சோதனை செய்த கேரள சுகாதாரத்துறையினர், அணைப்பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பில் அதிகாரிகளை தனிமைப்படுத்தி உள்ளனர். அவர்களது சோதனை முடிவு வந்த பின்னரே, அணைப்பகுதியில் பணியில் ஈடுபடவேண்டும் என கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: