×

கொரோனா நோய் தொற்று பாதிப்பு 75ஆக உயர்வு: கோட்டை ஊழியர்கள் அனைவருக்கும் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை?

* ஊழியர் எண்ணிக்கையை 33% ஆக குறைக்க கோரிக்கை

சென்னை: தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 75 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடசென்னை பகுதியில் உள்ள ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், திரு.வி.க.நகர் மற்றும் அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் அதிகளவில் கொரோனா வைரஸ் பரவுகிறது. இந்த பகுதிகளில் இருந்துதான் சென்னை, தலைமை செயலகத்துக்கு அதிகளவில் ஊழியர்கள் வருகிறார்கள்.

இவர்கள் தலைமை செயலகம் வந்து செல்ல அரசு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தளவு பேருந்துகள் இயக்கப்படுவதால் சமூக இடைவெளி இல்லாமல் கூட்ட நெரிசலுடன் பயணம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தலைமை செயலகத்தில் பணியாற்றும் 2 பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட சில உயர் அதிகாரிகள், அவர்களின் நேர்முக உதவியாளர்களுக்கு சமீபத்தில் கொரோனா பாதித்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா பாதித்துள்ளது. நேற்று நிலவரப்படி தலைமை செயலகத்தில் பணியாற்றும் 45 பேருக்கு கொரோனா பாதித்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட சில உயர் அதிகாரிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பாதித்த 45 பேருடன் தொடர்பில் இருந்த 35 தலைமை செயலக ஊழியர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்பத்தில் உள்ளவர்களும் நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். தலைமை செயலகத்தில் சுமார் 75 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால், மற்ற அனைவருக்கும் தனியார் மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனை செய்ய துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. இன்னும் ஒன்று, இரண்டு நாளில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. அதேபோன்று, அரசு ஊழியர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து கொரோனா சிகிச்சை பெற்றால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று சுகாதாரத்துறை கருதுவதால், பெரும்பாலான அரசு ஊழியர்களை தனியார் மருத்துவமனைகளிலேயே சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அரசு ஊழியர்களின் இன்சூரன்ஸ் கார்டு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி மற்றும் நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து நேற்று தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து பேசினர். அப்போது, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு 50 சதவீத தலைமை செயலக பணியாளர்கள் தினசரி தலைமை செயலகத்திற்கு பணிக்கு வருகின்றனர். கடந்த 2 வாரங்களில் தலைமைசெயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 45 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அவர்களுடன் தொடர்பில் இருந்த 35க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா நோய் வராமல் தடுக்க 50 சதவீதத்துக்கு பதிலாக 33 சதவீத பணியாளர்களை மட்டுமே பணிக்கு வர அரசு அனுமதிக்க வேண்டும். சில துறைகளில் அலுவலக உதவியாளர்கள், பதிவுரு எழுத்தர்கள், துறை செயலாளர்களின் தனி உதவியாளர்களை தினசரி பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் அதிக தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு ஊழியர்களை அழைத்து வர குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் எண்ணிக்கையை 400 ஆக அதிகரிக்க வேண்டும்.

கொரோனா தொற்று தலைமை செயலகத்தில் மேலும் பரவாமல் இருக்க சென்னை, ராயபுரம் உள்ளிட்ட சிவப்பு மண்டலங்களில் இருந்து வரும் பணியாளர்கள் ஊரடங்கு முடியும்வரை அலுவலகம் வருவதை தவிர்க்க வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பணியாளர்களின் விடுப்பு காலத்தை சிறப்பு தற்செயல் விடுப்பாக அறிவிக்க வேண்டும். நாமக்கல் கவிஞர் மாளிகையில் குளிர்சாதனங்கள் இயக்கப்படுவதில்லை. அதனால் தற்காலிக ஏற்பாடாக மின்விசிறி ஏற்படுத்தி தர வேண்டும். கர்ப்பிணிகள், 55 வயதை கடந்த பணியாளர்களுக்கு ஊரடங்கு முடியும் வரை அலுவலக பணி மேற்கொள்ள விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.



Tags : epidemic ,hospital testing ,Corona ,Fort , Corona, Fort Staff, Private Hospital
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...