4 நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா தொற்று? வீடுகளில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் விசாரணை: ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் உத்தரவு

சென்னை: சென்னை, மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 4 பேருக்கும் அதிகாரிகள், ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதையடுத்து நீதிபதிகள், வீட்டில் இருந்தே வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று ஐகோர்ட் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். ஜூன் 1ம் தேதி முதல் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் அனைத்தும் முன்புபோல் விசாரிக்கப்படும் என்றும் இதற்காக 31 நீதிமன்றங்கள் செயல்படும் என்றும் நீதிபதிகள் தங்களின் நீதிமன்ற அறைகளில் வழக்குகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிப்பார்கள், வக்கீல்கள் தங்கள் வீடுகளில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பாணை வெளியிட்டார்.

இதையடுத்து, ஜூன் 1ம் தேதி உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய  6 அமர்வுகள் மற்றும் ஒரு நீதிபதி உள்ள 24 அமர்வுகளும் வழக்குகளை விசாரித்து வந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு, மதுரை கிளை நீதிபதி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்ற துணை பதிவாளர், உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற வளாகம் மீண்டும் மூடப்பட்டது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை வருமாறு: சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் நிலவும் நிலை குறித்து அரசு வெளியிடும் அறிக்கைகள், பத்திரிகை செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது கொரோனா விரைவாக பரவுவது தெரிகிறது.

எனவே, நீதிமன்ற பணிகளை மேற்கொள்வது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் கொண்ட இரு அமர்வுகள், ஒரு நீதிபதி கொண்ட 4 அமர்வுகள் என்று மொத்தம் 6 அமர்வுகள் அவசர வழக்குகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கும். மதுரை கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட ஒரு டிவிசன் பெஞ்ச், ஒரு நீதிபதி கொண்ட 3 அமர்வுகள் என்று மொத்தம் 4 அமர்வுகள் அவசர வழக்குகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கும்.

 பணி ஒதுக்கப்படும் நீதிபதிகள் வரும் 30ம் தேதிவரை நீதிமன்றம் வராமல் தங்களது வீடுகளில் இருந்தபடி வழக்குகளை விசாரிப்பார்கள். காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிப்பார்கள். கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டங்களில் நீதிபதிகள் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்கின்றனர். இந்த நடைமுறை உள்ள அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், திண்டுக்கல்,விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில், மாவட்ட தலைநகர் மற்றும் தாலுகா அளவில் உள்ள நீதிமன்றங்கள் வழக்கமான முறையில் நாளை (திங்கட்கிழமை) முதல் செயல்படலாம்.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தாலுகா அளவில் உள்ள நீதிமன்றங்கள் மட்டும் செயல்படலாம். கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்துவது, சமூகஇடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* மதுரை கிளையில் இரு நீதிபதிகள்  கொண்ட ஒரு டிவிசன் பெஞ்ச், ஒரு நீதிபதி கொண்ட 3 அமர்வுகள் என 4  அமர்வுகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கும்.

* 2 நீதிபதிகள் கொண்ட இரு அமர்வுகள், ஒரு நீதிபதி கொண்ட 4 அமர்வுகள் என  6 அமர்வுகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கும்.

Related Stories: