×

கொரோனாவில் இத்தாலி, ஸ்பெயினை பின்னுக்கு தள்ளியது உலகளவில் 5வது இடத்தில் இந்தியா : மொத்த பாதிப்பு 2.43 லட்சமாக உயர்ந்தது

புதுடெல்லி: கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளிவிட்டு, 5வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. தற்போது, இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 43 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், இந்தியா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்த வரையில், கடந்த மாதம் 24ம் தேதி, 1 லட்சத்து 38 ஆயிரத்து 526 பேருக்கு பாதிப்பு என்ற எண்ணிக்கையுடன், உலகளவில் மோசமாக பாதித்த நாடுகள் பட்டியலில் டாப்-10 இடத்தில் இடம் பிடித்தது. இந்நிலையில், இரண்டே வாரத்தில் தற்போது இத்தாலி, ஸ்பெயினை ஒரே நாளில் முந்தி 5வது இடத்தை பிடித்துள்ளது.
 நாடு முழுவதும் நேற்று காலையுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலியானோர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 9,887 பேர் புதிதாக வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், 294 பேர் இறந்ததாக கூறப்பட்டது. இந்த புள்ளி விபரத்தின்படி, இத்தாலியை பின்னுக்கு தள்ளிவிட்டு உலகளவிலான பாதிப்பில் 6வது இடத்துக்கு இந்தியா வந்தது.
ஆனால், நேற்று இரவு நிலவரப்படி இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.43 லட்சமாக அதிகரித்தது. இதனால், இத்தாலி (2.34 லட்சம்), ஸ்பெயினை (2.40 லட்சம்) முந்திய இந்தியா, 5வது இடத்தை பிடித்துள்ளது. ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் சர்வதேச புள்ளி விவர பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன.  நோய் தொற்றின் தீவிரம் குறைந்துள்ள இங்கிலாந்தில் தற்போது ஒருநாளுக்கு சராசரியாக 1,500 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, அடுத்த 4, 5 நாட்களில் இங்கிலாந்தையும் இந்தியா முந்திவிடும். மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஆனால், பாதிப்பு அதிவேகமாக இருக்கிறது. இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி பலியானோரின் மொத்த எண்ணிக்கை   6,642 ஆக இருந்தது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 72 பேர் குணமடைந்து உள்ளனர். இன்னும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 942 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் பரவவில்லை என்றாலும் அதற்கான ஆபத்து இன்னும் நீடிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

அந்த அமைப்பின் சுகாதார அவசரகால திட்ட நிர்வாக இயக்குநர் மைக்கேல் ரியான் கூறுகையில், ‘‘தற்போதைய நிலையில், இந்தியாவில் நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாக 3 வார காலமாகிறது. இது தொற்றுநோய் பெரிய அளவில் தீவிரம் அடையவில்லை என்பதை காட்டுகிறது. ஆனாலும், இது வெடித்து பரவும் ஆபத்து இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட மக்கள் தொகை அதிகம் கொண்ட தெற்காசிய நாடுகளில் கொரோனா தீவிரம் அடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது,’’ என்றார்.


இந்தியா, சீனாவில் நிறையவே இருக்கும்
அமெரிக்காவின் மைனேவில் மருந்து உற்பத்தி ஆலையை பார்வையிட்ட அதிபர் டிரம்ப் பேசுகையில், ‘‘கொரோனா பரிசோதனையில் பெரிதாக புகழப்படும் தென் கொரியாவில் வெறும் 30 லட்சம் பரிசோதனை மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் இதுவரை 2 கோடி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இங்கு அதிகளவில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள் என்றால், அந்தளவுக்கு அதிகமான சோதனை செய்யப்படுகிறது. இதே போல், இந்தியாவிலும், சீனாவிலும் அதிகமான பரிசோதனை செய்தால், நோயாளிகள் எண்ணிக்கை நிச்சயம் பலமடங்கு அதிகமாக இருக்கும்,’’ என்றார்.

விரைவில்
2வது இடம்
இந்தியாவில் மிகவும் குறைந்தளவே கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதுவரை 40 லட்சம் பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பரிசோதனைகளை அதிகரித்தால், அடுத்த 2 மாதங்களில் கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா 2வது இடத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

டாப்-7 நாடுகள்
நாடு    பாதிப்பு    பலி
அமெரிக்கா    19,01,391    1,09,215
பிரேசில்    6,14,941    34,021
ரஷ்யா    4,58,102    5,717
இங்கிலாந்து    2,86,292    40,548
இந்தியா    2,43,733    6,642
ஸ்பெயின்    2,40,978    27,134
இத்தாலி    2,34,531    33,774Tags : India ,Italy ,Spain ,Corona ,world ,Pushed India , Corona, Italy, Spain, India
× RELATED 2 மீனவர்களை சுட்டுக் கொன்றதற்காக...