மாலத்தீவில் தவித்த 700 பேர் கடற்படை கப்பலில் நாளை தூத்துக்குடி வருகை

தூத்துக்குடி: மாலத்தீவிலிருந்து கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பலில் 700 இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்த கப்பல் நாளை (7ம் தேதி) தூத்துக்குடி துறைமுகம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்கள், பணியாற்றும் தொழிலாளர்கள் ஊரடங்கால் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மத்திய அரசு வந்தேபாரத் மூலம் மீட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள், கடற்படை கப்பல்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

ஆபரேஷன் சமுத்திரசேது திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2ம்தேதி இலங்கையில் இருந்து 713 பேர்களுடன் கடற்படை கப்பல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. 2வது கட்டமாக மாலத்தீவில் இருந்து 700 பேர்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி நேற்று உரிய பரிசோதனைக்கு பிறகு மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படை கப்பல் புறப்பட்டது.

இந்த கப்பல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், வ.உ.சி. துறைமுக நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. பயணிகள் வந்தவுடன் உரிய பரிசோதனை செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Related Stories: