ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஜரூர்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கணவாய் பகுதியில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடிக்கு கடந்த 2009ம் ஆண்டு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. மீட்டர் கேஜ் பாதையாக இந்த ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றுவதற்க்காக கடந்த 2010ல் ரயில் சேவை நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதை திட்ட பணிகள் துவங்கியது. இடையில் போதிய நிதி ஓதுக்கீடு இல்லாததால், இந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

முதற்கட்டமாக மதுரை-உசிலம்பட்டி இடையிலான 43 கிமீ தூர பணிகள் முடிவடைந்ததையடுத்து, முதற்கட்டமாக சோதனை ஓட்டம் நடந்தது. இதனைத்தொடர்ந்து உசிலம்பட்டி-போடி இடையே ரயில் பணிகள் நடந்து வந்தது. பணிகள் முடிந்து மதுரை-போடி இடையே ரயில் போக்குவரத்து விரைவில் துவங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ரயிவே பணிகள் மீண்டும் முடங்கின. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பணிகள், கடந்த மே 11 முதல் துவங்கியது. இதையொட்டி ஆண்டிபட்டி அருகே உள்ள கணவாய் பகுதியில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் சிலர் தெரிவிக்கையில், ‘‘மதுரை-போடி அகல ரயில் பாதை பணிகளில் ஆங்காங்கே பாலம் கட்டும் பணி, தடுப்புகள் அமைக்கும் பணி, சிக்னல் வயர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் மலைகளை குடையும் பணி நிறைவடைந்து விட்டது. தற்போது மழை பெய்து வருவதால் கணவாய் பகுதியில் நீர்கசிந்து வருகிறது. கசிவு நீரை வெளியேற்ற வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களில் கணவாய் பகுதியில் ரயில்வே பணிகள் முடிந்துவிடும்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: