வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களின் பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது; நெல்லை, தென்காசியில் கொரோனா பரிசோதனை அதிகம், பாசிட்டிவ் குறைவு: முழுமையாக கட்டுக்குள் வருமா?

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தினமும் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தாலும் கடந்த சில தினங்களாக பாசிட்டிவ் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களின் பாதிப்பு சரிந்து வருவதால் இரு மாவட்டங்களில் முழுமையாக கட்டுக்குள் வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த மார்ச் இறுதி முதல் கொரோனா தொற்று பரவி வருகிறது. ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே மாதம் முதல் வாரம் வரை தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்தது. ஆனால் மே முதல் வாரத்தில் இருந்து இடம் பெயர்பவர்கள், வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வந்தவர்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதி வேகமாக இருந்தது.

 மே மாதம் 5ம் தேதிவரை நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62 என்ற அளவிலேயே இருந்தது. அதன் பின்னர் வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்களில் பலருக்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மேலும் 220 பேருக்கு பரவியுள்ளது. இன்று காலை நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 382 ஆகவும் தென்காசி மாவட்டத்தில் 98 ஆகவும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்த இரு மாவட்டங்களிலும் நேற்று 2 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இன்றும் குறைந்த அளவிலேயே எண்ணிக்கை இருக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆயினும் கடந்த ஒரு மாதமாக கொரோனா பரிசோதனை அதிகரித்துள்ளது.

வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருகை தந்து தனிமை முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு பரிசோதனை தொடர்கிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 600 முதல் 800 பேர் வரை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த மருத்துவ பரிசோதனையில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே பாசிட்டிவ் ஏற்படுகிறது என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்ற 150க்கும் மேற்பட்டவர்கள் சிசிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நெல்லையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 55 பேர் நலமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மற்றொரு நாளில் 39 பேர் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. ஆயினும் மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் பேர் கடந்த 3 வாரங்களில் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு வந்துள்ளனர்.

இவர்களில் தொற்று பாதிப்பு இல்லாதவர்கள் வீடுகளில் தொடர்ந்து சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்படுகின்றனர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை நிலவரப்படி 74 பேர் சிகிச்சையில் உள்ளனர். வேகமாக உயர்ந்த உள்நோயாளிகள் எண்ணிக்கை தற்போது ஓரளவு குறைந்துள்ளதால் டாக்டர்கள், நர்சுகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். ஆனால் இது மேலும் குறையுமா கூடுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

தூத்துக்குடியில் இன்று 12 பேருக்கு தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி 312 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று காலை வரை மேலும் 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இதுவரை 176 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: