வறுமையை தகர்த்த 91 வயது மனிதநேயம்; வியாபாரிகளிடம் ரூ4.20 லட்சம் வாடகையை வாங்காத டாக்டர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ1 லட்சம் அளிப்பு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியத்தெருவில் கிளினிக் வைத்து நடத்தி வருபவர் டாக்டர் ரத்தினம் (91). தனக்கு சொந்தமான கட்டிடத்தில் 6 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த கடைகள் அனைத்தும் ஊரடங்கு காலத்தில் பூட்டப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களால் எப்படி நமக்கு வாடகை தர முடியும் என்று நினைத்த டாக்டர் ரத்தினம் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கும் நீங்கள் எனக்கு வாடகை தர வேண்டாம் என்று வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளார். இந்த கடைகளில் ஒரு மாதம் ரூ1.40 லட்சம் வாடகை வரும். 3 மாதங்களுக்கும் வாடகையான ரூ4.20 லட்சத்தை வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனிதநேய மருத்துவரை பட்டுக்கோட்டை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்வேறு தரப்பு மக்களும், வியாபாரிகளும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து டாக்டர் ரத்தினம் கூறுகையில், கொரோனா நிவாரண நிதியாக தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ1 லட்சம் வழங்கியுள்ளேன். வியாபாரிகள் கஷ்டப்படும்போது அதை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்வோம் என்று 3 மாதங்களுக்கு வாடகை தர வேண்டாம் என்று கூறினேன் என்றார்.

Related Stories: