மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனா பாதிப்பால் பலியா ?

இஸ்லாமாபாத் : நிழலுலக தாதாவும் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவருமான தாவூத் இப்ராகிம் கொரோனா பாதிப்பால் பாகிஸ்தானில் உயிரிழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இவர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து தாவூத் வீட்டு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என்று தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராகிம் கூறியிருக்கிறார். தாவூத் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் வீட்டில் இருப்பதாகவும் அனீஸ் தொலைபேசி மூலம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாக மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.இதற்கிடையே கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி தாவூத் இப்ராகிம் மரணம் அடைந்துவிட்டதாகவும் இன்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

யார் அந்த தாவூத் இப்ராகிம்

இந்தியாவில் நடைபெற்ற 1993 மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் உள்பட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா  தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதன்பேரில் பாகிஸ்தானிடம் தகவல்கள் வழங்கியும், அந்த நாடு தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை. அத்துடன் தங்கள் நாட்டில் அவர் இல்லவே இல்லை என உறுதிபட மறுத்து வருகிறது.தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் உள்ளார் என்பது தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் இருந்தும் பாகிஸ்தான் அதனை தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.தாவூத் உலக அளவில் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.  பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ இவருக்கு ஆதரவு வழங்கி வருகிறது என்று புகார் உள்ளது.

Related Stories: